அர்னாப் புயல்: ஆந்திராவில் மூவர் உயிரிழப்பு; தெலங்கானா, ஒடிசா, ஜார்க்கண்டிலும் பாதிப்பு

புயல் காரணமாக சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் அதிகாரிகள். | இடம்: கஜபதி மாவட்டம், ஒடிசா

புயல் காரணமாக சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் அதிகாரிகள். | இடம்: கஜபதி மாவட்டம், ஒடிசா

Updated on: 
2 min read

புதுடெல்லி: அர்னாப் புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் மூவர் உயிரிழந்தனர். சுமார் 57,000 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அர்னாப் புயல் இன்று (புதன்கிழமை) நர்சாபூர் - ஏனம் இடையே காலை 8 மணியளவில் முழுமையாகக் கரையைக் கடந்தது.

இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், ‘அர்னாப் புயல் இன்று (புதன்கிழமை) அதிகாலை 2 மணி முதல் காலை 8 மணிக்குள் நர்சாபூருக்கு கிழக்கு - வடகிழக்கே சுமார் 20 கி.மீ. தொலைவிலும், ஏனத்துக்கு தென்மேற்கே 40 கி.மீ. தொலைவிலும் காக்கிநாடாவுக்கு தென்மேற்கே 60 கி.மீ. தொலைவிலும் கடற்கரையைக் கடந்தது.

புயல் கரையைக் கடந்தபோது காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கி.மீ. வேரை இருந்தது. அவ்வப்போது காற்றின் வேகம் மணிக்கு 150 கி.மீ. வரை அதிகரித்தது’ என தெரிவிக்கப்பட்டது.

புயல் மற்றும் கனமழை காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் மூவர் உயிரிழந்தனர். மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் மரம் விழுந்ததில், கிஷோர் குமார் என்ற 46 வயது நபர் உயிரிழந்தார். விசாகப்பட்டினம் மற்றும் அனகாபள்ளி மாவட்டங்களில் தலா ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 57,000 பேர் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது.

அர்னாப் புயல் கரையை கடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு விசாகப்பட்டினம் கடற்கரைப் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. புயல் கரையை கடக்கும் பகுதிகளில் தாழ்வான இடங்களில் 1 முதல் 1.5 மீட்டர் உயரத்துக்கு கடல் நீர் ஊடுருவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.

புயல் தற்போது நிலப் பகுதிக்கு நகர்ந்துவிட்டதால், கடல் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக ஏராளமான மின் கம்பங்கள், மரங்கள் கீழே விழுந்துள்ளன. பயிர்களும் பெருமளவில் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக முதல்வர் சந்திரபாபு நாயுடு, உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், ‘அர்னாப் புயல் காரணமாக ஆந்திரப் பிரதேசத்தில் சுமார் 70,900 ஹெக்டேர் பரப்பளவிலான நெற்பயிர்களும், 10,450 ஹெக்டேர் பரப்பளவிலான தோட்டக்கலைப் பயிர்களும் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.

சுமார் 180 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மாநிலத்தில் ஏற்பட்டிருக்கும் சேதத்தை மதிப்பிட மத்திய குழுவை அனுப்பி வைக்க கோருகிறேன்’ என தெரிவித்துள்ளார்.

தெலங்கானாவில் ஆரஞ்சு எச்சரிக்கை: அர்னாப் புயலின் தாக்கம் தெலங்கானாவிலும் ஏற்பட்டுள்ளது. அங்கு காலை முதல் மழை பெய்து வருகிறது. நான்கு மாவட்டங்களில் 10 மி.மீ மழையும், மற்ற நான்கு மாவட்டங்களில் 2 மி.மீ. முதல் 10 மி.மீ. வரையிலான மழையும் பதிவாகி உள்ளது. இந்த புயல் கரையை கடந்த பிறகு மிக தீவிர புயல் என்ற நிலையில் இருந்து தீவிர புயல் என்ற நிலைக்கு வலுவிழந்தது.

ஹைதாராபாத் வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கம்மம், பத்ராத்ரி கொத்தகுடெம், நல்கொண்டா, சூர்யாபேட் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒடிசாவில் 30,000 பேர் வெளியேற்றம்: அர்னாப் புயல் காரணமாக ஒடிசாவின் தாழ்வான பகுதிகள் மற்றும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களில் இருந்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் சுரேஷ் பூஜாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தின் மகேந்திரகரில் மாநிலத்திலேயே அதிகபட்சமாக 250 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. கோராபுட் மாவட்டத்தின் பொட்டாங்கியில் 188 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

ஜார்க்கண்ட்டில் பள்ளிகளுக்கு விடுமுறை: அர்னாப் புயலின் தாக்கம் நாளை வரை நீடிக்கும் என்பதால் ஜார்க்கண்ட்டின் சில பகுதிகளில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஞ்சி, மேற்கு சிங்பூம், கிழக்கு சிங்பூம், சிம்தேகா மாவட்ட நிர்வாகங்கள் இன்றும் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளன.

<div class="paragraphs"><p>புயல் காரணமாக சாலையில் விழுந்த மரத்தை அகற்றும் அதிகாரிகள். |&nbsp;இடம்: கஜபதி மாவட்டம், ஒடிசா</p></div>
டாடா குழுமம் சீரழிக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in