

புதுடெல்லி: நடப்பாண்டில் சைபர் கிரைம் புகார்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் அடங்கிய அமர்விடம் அட்டர்னி ஜெனரல் வெங்கடரமணி நேற்று பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இணையவழி குற்றங்கள் மற்றும் ‘டிஜிட்டல் கைது’ சம்பவங்களில் 75% சரிவு ஏற்பட்டிருந்தாலும், குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உச்ச நீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதை மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது.கடந்த 2024-ம் ஆண்டில் சைபர் கிரைம் பிரிவுக்கு வந்த புகார்களின் எண்ணிக்கை 1,23,672-ஆக இருந்தது. நடப்பாண்டில் (ஜூன் 30 வரை) 16,377 புகார்கள் மட்டுமே வந்துள்ளன. சுமார் 36,000 இணையவழி மோசடி வழக்குகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.18 கோடி திரும்பப் பெற்று வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இணையவழி மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வகையில் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். மோசடிக்காரர்களிடமிருந்து மீட்கப்படும் பணத்தை ‘டிஜிட்டல் கைது’ மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.