

கொல்கத்தா: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் வங்காள கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் (10,195 முதல் தர ரன்கள்) எடுத்தவருமான மனோஜ் திவாரி, மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி அரசில் விளையாட்டுத் துறை இணை அமைச்சராகப் பணியாற்றினார்.
மே.வங்கத்தில் சமீபத்திய சட்டப்பேரவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் மம்தா பானர்ஜியின் 15 ஆண்டு கால பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இந்நிலையில் மனோஜ் திவாரி அளித்த பேட்டியில் கூறும்போது, ”திரிணமூல் காங்கிரஸின் (டிஎம்சி) படுதோல்வியை கண்டு நான் சற்றும் ஆச்சரியப்படவில்லை. ஒரு கட்சி முழுவதும் ஊழலில் ஈடுபட்டு எந்தத் துறையிலும் வளர்ச்சி இல்லாதபோது இவ்வாறு நடக்கத்தான் வேண்டும்.
சமீபத்திய தேர்தலில் பெரும் தொகையை கொடுக்க முடிந்தவர்களால் மட்டுமே திரிணமூல் காங்கிரஸிடம் டிக்கெட் வாங்க முடிந்தது. இந்த முறை 70-72 வேட்பாளர்கள் டிக்கெட் பெறுவதற்காக சுமார் ரூ.5 கோடி செலுத்தியுள்ளனர். என்னிடமும் பணம் கேட்டார்கள். ஆனால் நான் கொடுக்க மறுத்ததால் எனக்கு ‘சீட்’ வழங்கப்படவில்லை” என்றார்.