

புதுடெல்லி: எஸ்.சி, எஸ்டி சமூக பிரிவுகளில் பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை ‘கிரீமி லேயர்’ என வகைப்படுத்தி இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
இட ஒதுக்கீட்டுக்கான பலன்கள் ஏழை மக்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், கொள்கைகளை வகுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பட்டியலின, பழங்குடியின வகுப்பில் (எஸ்சி, எஸ்டி) உள்ள பொருளாதாரத்தில் முன்னேறியவர்கள், இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பலன்களைப் பெற்றுவிடுகின்றனர். ஆனால், அதே சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் இடஒதுக்கீட்டின் பலனை பெறாமல் உள்ளனர். இது இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே சிதைக்கிறது.
எனவே, பொருளாதாரத்தில் முன்னேறியவர்களை இடஒதுக்கீடு பலனில் இருந்து நீக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிட கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தது இந்நிலையில் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ள மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், எஸ்.சி, எஸ்.டி, பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் வருமானம் அடிப்படையில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளது.
‘கிரீமி லேயர்’ விலக்கு என்பது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்குப் பொருந்தாது என்றும், அரசியல் சாசனத்தின் பிரிவுகள் 341 மற்றும் 342-ன் கீழ் பட்டியல் சாதியினர், பழங்குடியினரை வகைப்படுத்த நாடாளுமன்றத்தால் மட்டுமே முடியும் எனவும் நீதிமன்றங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்றும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.