

புதுடெல்லி: அரசுப் பணியாளர்களுக்கு எதிராக ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அரசிடம் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்கும் பிரிவை எதிர்த்த மனு மீது உச்ச நீதிமன்றம் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளது.
இது தொடர்பாக பொதுநல வழக்காடு மையத்தின் சார்பில் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாக ரத்னா, கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, நீதிபதி பி.வி.நாகரத்னா கூறிய தீர்ப்பில், “அரசுப் பணியாளருக்கு எதிராக ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அரசிடம் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்கும் பிரிவு அரசமைப்புக்கு எதிரானது” என்று தெரிவித்தார்.
மற்றொரு நீதிபதியான கே.வி. விஸ்வநாதன் கூறிய தீர்ப்பில், “அரசுப் பணியாளருக்கு எதிராக ஊழல் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அரசிடம் ஒப்புதல் பெறுவதை கட்டாயமாக்கும் பிரிவு செல்லும். அரசுப் பணியாளரை விசாரிக்க வேண்டுமா அல்லது இல்லையா என்பதை லோக்பால் அல்லது லோக் ஆயுக்த அமைப்பு முடிவு செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளதால் இந்த விவகாரம் தலைமை நீதிபதிக்கு அனுப்பப்பட்டு கூடுதல் அமர்வு ஏற்படுத்தப்பட்டு விசாரிக்கப்பட உள்ளது.