“ஐநா பாதுகாப்பு கவுன்சிலை சீரமைப்பதற்கான காலம் கடந்துவிட்டது” - எஸ்.ஜெய்சங்கர் ஆதங்கம்

“ஐநா பாதுகாப்பு கவுன்சிலை சீரமைப்பதற்கான காலம் கடந்துவிட்டது” - எஸ்.ஜெய்சங்கர் ஆதங்கம்
Updated on
1 min read

புதுடெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலை சீர்திருத்துவதற்கான காலம் கடந்துவிட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு புதுடெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில், உலக ஆளுகை மற்றும் பலதரப்பு அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தம் என்ற தலைப்பில் ஜெய்சங்கர் உரையாற்றினார்.

அப்போது அவர், “பாதுகாப்பு கவுன்சில் உட்பட ஐநாவில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது மிக முக்கியம். ஐநா பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் நிரந்தரமற்ற உறுப்பு நாடுகள் இரண்டையும் விரிவுபடுத்த வேண்டும். இல்லாவிட்டால், ஐநாவின் செயல்திறனும் நம்பகத்தன்மையும் சரிந்துவிடும்.

ஐநா சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்ல எழுத்துப்பூர்வ பேச்சுவார்த்தைகளே தற்போதைய தேவை.

பன்னாட்டு நிதி கட்டமைப்புகளில் சீர்திருத்தம் மிக அவசரமாகத் தேவைப்படுகிறது. இத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் மூலமே, பன்னாட்டு வளர்ச்சி வங்கிகளை மேலும் பதிலளிக்கக்கூடியதாகவும், வலுவானதாகவும், திறன்மிக்கதாகவும் மாற்ற முடியும். அதோடு, வளர்ச்சி மற்றும் காலநிலை நிதி உதவிக்கான அணுகலை அதிகரிப்பதும் அவசியம்.

விதிகள் அடிப்படையிலான, நியாயமான, வெளிப்படையான, அனைவரையும் உள்ளடக்கிய ஒரு சர்வதேச வர்த்தக அமைப்பாக உலக வர்த்தக அமைப்பை மாற்றுவதன் மூலமே சந்தை சாரா நடைமுறைகள், விநியோகச் சங்கிலிகளின் குவிப்பு, நிச்சயமற்ற சந்தை அணுகல் போன்ற சவால்களுக்கு பதில் அளிக்க முடியும்.

நமது காலத்தின் செய்தி தெளிவாக இருக்கிறது. ஒத்துழைப்பு இன்றியமையாதது; உரையாடல் அவசியமானது; சீர்திருத்தத்துக்கான காலம் கடந்துவிட்டது” என தெரிவித்துள்ளார்.

“ஐநா பாதுகாப்பு கவுன்சிலை சீரமைப்பதற்கான காலம் கடந்துவிட்டது” - எஸ்.ஜெய்சங்கர் ஆதங்கம்
யார் இந்த வி.டி.சதீசன்? - ‘துல்லியத் தாக்குதல் அரசியல்’ முதல் கேரள முதல்வர் பதவி வரை!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in