அதிகாரியின் தற்கொலையால் சர்ச்சை: பஞ்சாப் ஆம் ஆத்மி அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் ராஜினாமா

லால்ஜித் சிங் புல்லர்

லால்ஜித் சிங் புல்லர்

Updated on
1 min read

சண்டிகர்: ஓர் அதிகாரி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், பஞ்சாப் அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர், முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.

அமிர்தசரஸில் மாவட்ட சேமிப்புக் கிடங்கு மேலாளரின் தற்கொலை விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணையை உறுதி செய்வதற்காக, போக்குவரத்து அமைச்சர் புல்லரை ராஜினாமா செய்யுமாறு கேட்டுக்கொண்டதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறினார்.

முன்னதாக, அமிர்தசரஸில் மாவட்ட மேலாளராகப் பணியாற்றி வந்த ககன்தீப் சிங் ரந்தாவா, சமீபத்தில் விஷமருந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு, அமைச்சர் லால்ஜித் சிங் புல்லர் தன்னை வற்புறுத்தி சித்ரவதை செய்ததாக குற்றம்சாட்டி அவர் ஒரு காணொலியைப் பதிவு செய்திருந்தார்.

சமூக ஊடகங்களில் வெளியான ஒரு காணொலியில், சேமிப்புக் கிடங்கு மேலாளர் ககன்தீப் சிங் ரந்தாவா, தான் விஷம் அருந்திவிட்டதாக குறிப்பிட்டு, இதற்கு அமைச்சர் புல்லர் தான் காரணம் எனவும் தெரிவித்திருந்தார்.

ரந்தாவாவின் மரணத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க பஞ்சாப் தலைமைச் செயலாளர் கே.ஏ.பி. சின்ஹாவுக்கு உத்தரவிட்ட முதல்வர் பகவந்த் மான், அரசியல் அழுத்தத்தால் ஓர் அதிகாரியை இழப்பதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார்.

பஞ்சாப் சிறை மற்றும் போக்குவரத்துத் துறைகளை வகித்த புல்லர், ஒரு டெண்டர் தொடர்பாக ரந்தாவாவை வற்புறுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

அமைச்சரின் ராஜினாமா போதுமானதல்ல என்று கூறி, புல்லர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என அமிர்தசரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் குர்ஜீத் சிங் அவ்லா கோரிக்கை விடுத்தார்.

சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் பிக்ரம் மஜிதியா மற்றும் பஞ்சாப் பாஜக தலைவர் சுனில் ஜாக்கர் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள், இந்த விவகாரம் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், புல்லர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் புல்லர் அந்த அதிகாரியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகக் குற்றம்சாட்டிய ஜாக்கர், “பஞ்சாபில் தூய்மையான மற்றும் நேர்மையான அரசாங்கத்தை வழங்கும் ஆம் ஆத்மி கட்சியின் செயல் இதுதானா?” எனக் கேள்வி எழுப்பினார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் பொய்யானவை என்று புல்லர் தெரிவித்துள்ளார்.

அவர், "எங்கள் கட்சி எப்போதும் உண்மையை ஆதரிக்கிறது. எப்போதும் உண்மையுடன் நிற்கிறது. எனவே, என் மீதான அந்தக் குற்றச்சாட்டுகள் முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இந்த விசாரணை முடியும் வரை, எனது அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதற்கு ஒப்புதல் அளிக்குமாறு கட்சியையும், முதல்வரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்" என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>லால்ஜித் சிங் புல்லர் </p></div>
ராமதாஸ் - சசிகலா கூட்டணி: தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ‘அதிர்ச்சி’... ஏன்?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in