

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த்
புதுடெல்லி: என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத் திட்டத்தில், ‘நீதித்துறையில் ஊழல்’ என்ற பகுதி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளதோடு, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) சமூக அறிவியல் பாடத்தில், நீதித்துறையில் ஊழல் என்ற பகுதி இடம்பெற்றுள்ளது. ‘நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு’ என்ற தலைப்பில் அந்தப் பகுதி இடம்பெற்றுள்ளது. இதில் நீதிமன்றங்களில் படிநிலை, நீதிக்கான நடைமுறைகளைத் தாண்டி, நீதித்துறையில் ஊழல் மற்றும் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
தவிர, ”நீதித்துறையில் ஊழல் நடைபெறும் சம்பவங்கள் பொதுமக்களின் நம்பிக்கையில் பாதிப்பை ஏற்படுத்தும்’’ என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.ஆர்.கவாய் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் தெரிவித்த கருத்தும் என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு பாடத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் உச்ச நீதிமன்றத்தில் நேற்று இந்த விவகாரம் குறித்து புகார் எழுப்பினார்.
அதற்கு தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறியதாவது: “நீதித்துறை உட்பட எந்த அமைப்புக்கும் களங்கம் ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும். நீதித்துறையின் தலைவர் என்ற முறையில் என் கடமையை நான் செய்துள்ளேன். இது திட்டமிட்ட செயலாக உள்ளது. இதற்கு மேல் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
இது குறித்து தானாகவே முன்வந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஒன்றிரண்டு நாட்கள் பொறுத்திருங்கள். என்சிஇஆர்டி-யின் பாடத்தால் நாட்டின் அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கலங்கி போயுள்ளனர். இவ்வாறு தலைமை நீதிபதி சூர்ய காந்த் கூறினார்.
முன்னதாக நாடாளுமன்றத்தில் உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய சட்டத் துறை அமைச்சகம் வெளியிட்ட பதிலில், ”கடந்த 2016ம் ஆண்டு முதல் 2025ம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக 7,528 புகார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் அளிக்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தது. இதற்குப் பிறகு தான் இந்த விவகாரம் பெரிதாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் நீக்கம்: இதற்கிடையில், என்சிஇஆர்டி 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறை பற்றி உள்ள சர்ச்சைக்குரிய கருத்துகள் நீக்கப்படும் என்று மத்திய அரசு உயர் அதிகார வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.
இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ”நீதித்துறை பற்றி என்சிஇஆர்டி புத்தகத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை எழுதியிருக்க கூடாது. சில கருத்துகளை கூறுவது தேவையில்லாதது” என்று தெரிவித்தனர்.