

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறான பதிவு வெளியிட்ட விவகாரத்தில், கேரள மாநிலக் காங்கிரஸ் குழுவின் நிர்வாகிகளுக்கு உச்சநீதிமன்றம் நேற்று நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இதுதொடர்பான வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் அரவிந்த் குமார், விபுல் எம். பஞ்சோலி அடங்கிய அமர்வு கூறியதாவது: நீதிமன்றத்தின் தீர்ப்புகளை விமர்சிக்க சுதந்திரம் உண்டு. ஆனால், பேச்சு சுதந்திரம் என்பது நீதி நிர்வாகத்தில் தலையிடுவதற்கோ அல்லது அச்சுறுத்துவதற்கோ ஆனகேடயமாக மாறக் கூடாது.
எவ்வளவு பெரிய உயர்பதவியில் இருப்பவராக இருந்தாலும், நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் குறைக்க முயற்சித்தால் அது இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படும். நீதித்துறையின் அமைதியையும் பொறுமையையும் நிறுவனத்தின் பலவீனமாக ஒருபோதும் தவறாகக் கருதிவிடக் கூடாது. இவ்வாறு நீதிபதிகள் காட்டமாகத் தெரிவித்தனர்.
விசாரணையின் போது, கேரள மாநிலக் காங்கிரஸ் குழு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அந்தப் பதிவு கட்சி நிர்வாகிகளின் அனுமதியின்றிப் பதிவேற்றம் செய்யப்பட்டது; பின்னர் அது நீக்கப்பட்டு நிபந்தனையற்ற மன்னிப்பும் கேட்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த நீதிபதி குமார், “இந்த மன்னிப்பு வெறும் பேனாவில் இருந்து வந்ததா, இதயத்தில் இருந்து வந்ததா என்பதை நீதிமன்றம் பரிசீலிக்கும்” என்றார்.
கடந்த அக்டோபர் 12 அன்று கேரள காங்கிரஸின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு இணையத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து நீக்கப்பட்டது. அப்பதிவை வெளியிட்டவர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாகக் கட்சி அறிவித்தது.