பெரியார் நூலக புத்தக கொள்முதல் விவகாரம்: முறைகேடு தொடர்பாக தவெக - திமுக பரஸ்பரம் குற்றச்சாட்டு

விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
பெரியார் நூலக புத்தக கொள்முதல் விவகாரம்: முறைகேடு தொடர்பாக தவெக - திமுக பரஸ்பரம் குற்றச்சாட்டு
Updated on: 
3 min read

சென்னை/கோவை: பெரியார் நூலகப் புத்தகக் கொள்முதல் முறைகேடு யார் ஆட்சியில் நடந்தது என்பது குறித்து ஆளும் தவெகவுக்கும் எதிர்க்கட்சியான திமுகவுக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது.

கொள்முதல் ஆணைகள் பிப்ரவரியில் வழங்கப்பட்டதாக தவெகவும், நூல்களில் ஜூன் மாத முத்திரை இருப்பதாக திமுகவும் குற்றம் சாட்டி வருவதால் இந்த விவகாரம் அரசியல் ரீதியாகப் பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

இதுகுறித்து சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் பேசும் போது, ‘‘பெரியார் நூலகத்தில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக ஆய்வு செய்தபோது வேதனையாக உள்ளது.

நூலகத்தில் இடம்பெற்றுள்ள புத்தகங்களின் எழுத்தாளர்களை இதுவரை கேள்விப்பட்டதே இல்லை. அதில் ஒரு பதிப்பகத்தில் இருந்து 1,500 நூல்களை கடந்த ஆட்சியாளர்கள் பிப்ரவரி மாதத்தில் வாங்கியுள்ளனர்.

அப்படி ஒரு பதிப்பகம் செவ்வாய் கிரகத்திலும் இல்லை. பெரியார் நூலகத்தில் நடந்துள்ள ஊழல் கடந்த ஆட்சியில் திமுகவில் நடைபெற்ற மெகா ஊழலுக்கு எடுத்துக்காட்டு. பெரியார் பெயரில் ஊழல் செய்துள்ளனர்.

பொதுநூலக இயக்குநரின் செயல்முறைகளின்படி, எந்த புத்தகத்துக்கு எவ்வளவு விலை வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பணிகள் கடந்த நவம்பர் மாதமே தொடங்கிவிட்டது. இந்த ஊழல் குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப் படும்’’என்றார்.

இதுகுறித்து பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, ‘‘அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தப்படும்.

அதன் முடிவில் முறைகேடுகள் நடந்திருப்பது நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’என்றார். இதற்கிடையே, புத்தகக் கொள்முதல் முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸில் அமைச்சர் ராஜ்மோகன் புகார் அளித்துள்ளார்.

திமுக தலைமை விளக்கம்

இதற்கிடையே திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இடைத்தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தல் முடிவுக்கு பிறகு முதல்வரின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வந்துள்ள பதிவு ‘அடடே இந்த பொம்மை பேசுமா?’ என ஆச்சரியமளிக்கிறது. விலைவாசி உயர்வு குறித்து பதிவு இல்லை.

கொலைகள் குறித்து கவலையில்லை. மின்வெட்டு, மின் கட்டணம் குறித்தெல்லாம் எந்த வாக்குறுதியும் இல்லை. அவ்வளவு ஏன் அரசின் அசமஞ்சத்தால் கடலில் இறந்து மிதந்த மீனவர்கள் குறித்துகூட பதிவு இல்லை. ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் கோவை நூலகம் சென்றதும் அவருக்குக் கிடைத்த பாராட்டு பேசுபொருளானதும், புத்தகக் கொள்முதலில் ஊழல் என்று ஓடிவந்துள்ளார்.

பெரியார் அறிவுலகத்தில் அகல் விளக்கு மற்றும் பீனிக்ஸ் பதிப்பகத்தின் போலியான நூல்களில் மட்டும் ஜூன் மாதம் என்று முத்திரையிடப்பட்டுள்ளது என்று அங்குள்ள தோழர்கள் தெரிவிக்கிறார்கள்.

அந்த தேதிகூட முதல்வரின் பிறந்தநாள் தான். அதே பெரியார் அறிவுலகத்தில் உள்ள வால்காவிலிருந்து கங்கை வரை போன்ற புகழ்பெற்றமற்ற பதிப்பக நூல்கள் திமுக ஆட்சியின் மார்ச் மாத முத்திரையோடு உள்ளன.

அப்படியெனில் போலி பதிப்பக நூல்கள் எப்பொழுது வாங்கப்பட்டன? யார் முடிவு எடுத்தது? தவெக ஆட்சியில் யாருக்கு கமிஷன் போனது? திமுக ஆட்சியில் புத்தகத்தேர்வுக்குழுவில் இருந்த எழுத்தாளர் ஒருவர் தவெக ஆட்சிய மைந்த 6 மாதங்களுக்குப் பிறகு நூலகத்தில் உள்ள புத்தகங்களின் பெயர்களையும், விஜய் பாலு, விஜய் செல்வம், விஜய் ஆதித்தன், சுமேகா விஜய் என்ற ‘எழுத்தாளர்களின்’ பெயர்களையும் பார்த்து பதறிய பிறகு தான் அரசுக்குத் தெரிந்ததா? அல்லது எந்த விவரமும் தெரியாமல்தான் முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளாரா? இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தவெக ஐடி விங் பதில்

இதற்கு பதிலளிக்கும் வகையில் தவெக ஐடி விங் சமூகவலை தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘‘அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களுக்கு தங்கள் ஆட்சியில் கொள்முதல் ஆணை தரப்படவே இல்லை என்று திமுக கூறுகிறது.

ஆனால் அகல்விளக்கு என்ற பதிப்பகத்துக்கு கொள்முதல் ஆணை பிப். 14-ம் தேதி வழங்கப்பட்டது. அதேபோல், பீனிக்ஸ் பதிப்பகத்துக்கு கொள்முதல் ஆணை பிப். 13-ல் அளிக்கப்பட்டது.

இரு பதிப்பகங்களும் ஒரே ஊர். திருவாரூர் மாவட்டம் கொடவாசலாகும். இரு பதிப்பகங்களின் முழு விலாசமும் இடம் பெறவே இல்லை. அதைவிட இன்னொரு காமெடி பேராசிரியர் பெருமாள் முருகன் வெளியிட்ட ஆதாரத்தில் அகல்விளக்கு பதிப்பகம் சென்னை மடிப்பாக்கம் முகவரியில் உள்ளது.

பெரியார் நூலகத்தையே ஊழல் உலகமாக மாற்றிவிட்டு இதில் பெருமைப் பேச்சு வேறு பேசுகிறார் திமுக தலைவர். அவர் பேசிய பேச்சு மறைவதற்குள்ளாகவே அங்கு நடந்த ஊழல்கள் அம்பலமாகத் தொடங்கி விட்டன’’என்று கூறப்பட்டுள்ளது.

தமுஎகச கோரிக்கை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகிகள், நேற்று பெரியார் அறிவுலகத்தில் புத்தகங்களை ஆய்வு செய்தனர். இதுகுறித்து, அந்த அமைப்பின் துணை பொதுச்செயலாளர் ஆ.கரீம் கூறியதாவது: நூலகத்துக்காக அவசர அவசரமாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் அனைத்தும் ஜூன், ஜூலை மாதங்களில் வெளியிடப்பட்டுள் ளன. குறைந்த பக்கங்களைக் கொண்ட புத்தகங்களுக்கும் அதிக விலை நிர்ணயித்து கொள்முதல் செய்துள்ளனர்.

சில புத்தகங்களில் தவறான பொருளை தரக்கூடிய வகையில் வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நூல்களைத் தேர்வு செய்ததில் உரிய கவனம் செலுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட புத்தகங்களின் உள்ளடக்கம், ஆசிரியர்கள், விலை நிர்ணயம், வெளியீட்டு விவரங்கள் ஆகியவை குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும்.

முதல்கட்டமாக சர்ச்சைக்குரிய புத்தகங்களை அடையாளம் கண்டு, அவற்றை நூலகத்தில் இருந்து அகற்றுவதுடன், நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆதாரங்களை வெளியிடுவதில் தாமதம் ஏன்?

கோவை, திருச்சி, தென்காசி உட்பட 6 மாவட்ட நூலகங்களுக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் (பபாசி) பெயரில் சில மாதங்களுக்கு முன்பே அரசிடம் சிலர் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், அதற்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பபாசி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக காவல் துறையில் பபாசி புகார் அளித்து, விசாரணை நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், பதிப்பாளர்கள் சிலர் கூறும்போது, ‘‘நூலக கொள்முதல் நடவடிக்கைகள் அனைத்தும் இணையவழியே மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சர்ச்சைக்குரிய பதிப்பகத்தின் புத்தகங்கள் யாரால், என்ன விலையில் வாங்கப்பட்டன என்ற தகவல்களை ஆதாரங்களுடன் பொதுவெளியில் வெளியிடுவதில் அரசு ஏன் தாமதம் செய்கிறது?’’என்றனர்.

பெரியார் நூலக புத்தக கொள்முதல் விவகாரம்: முறைகேடு தொடர்பாக தவெக - திமுக பரஸ்பரம் குற்றச்சாட்டு
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் 07 நவம்பர் 2026

X