

புதுடெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா அமர்வு கடந்த திங்கட்கிழமை வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தபோது, வழக்கறிஞர் பிரவீன் சிங்ஹால், “உங்களால் அந்த நீதிபதி இருக்கையில் அமர முடியாது. அந்தப் பதவியில் இருக்க உங்களுக்குத் தகுதியில்லை. உங்களிடம் நேர்மை இல்லை” என்று விமர்சித்ததோடு, தலைமை நீதிபதி அந்தப் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் ஆவேசமாக கூறினார்.
இதையடுத்து, நீதிமன்றத்தின் காணொலி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு, பாதுகாவலர்கள் அவரை வெளியேற்றினர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் அளித்த கோரிக்கையை ஏற்று, அவர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு தொடர அட்டர்னி ஜெனரல் அனுமதி வழங்கியுள்ளார்.