

மணிலா: குவாட் அமைப்பின் உயர்நிலைக் கூட்டம் பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ் ஆகியோர் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்திய, பசிபிக் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா ஆகிய 4 நாடுகள் இணைந்து கடந்த 2007-ம் ஆண்டில் குவாட் என்ற அமைப்பை உருவாக்கின. இந்த அமைப்பின் உயர்நிலைக் கூட்டம் மணிலாவில் நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஜப்பான் பிரதமர் சனே டகாய்ச்சி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பேனிஸ் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பேசியதாவது:
அடுத்த 10 மாதங்களில் சீனாவுக்கு இணையாக அமெரிக்காவில் அரிய வகை கனிமங்கள் உற்பத்தி செய்யப்படும். அமெரிக்கா மட்டுமன்றி இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் அரிய வகை கனிமங்கள் உற்பத்தியை அதிகரிக்க அதிதீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அரிய வகை கனிமங்களின் விற்பனை சங்கிலி தொடர்பாக குவாட் நாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
அமெரிக்காவுக்கு எதிராக ஈரான் செயல்பட்டால் அந்த நாடு மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும். அந்த நாட்டிடம் அணு ஆயுதங்கள் இருக்கக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறோம். குவாட் தொழிலதிபர்கள் கூட்டமைப்பு, குவாட் செயற்கை நுண்ணறிவு கூட்டமைப்பு, கடல்சார் பாதுகாப்பு தகவல் பரிமாற்ற ஒத்துழைப்பு, குவாட் சைபர் பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆகிய 4 புதிய அமைப்புகள் உருவாக்கப்படும். இவ்வாறு அதிபர் ட்ரம்ப் பேசினார்.
குவாட் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: நடப்பாண்டில் குவாட் அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் 4 முறை கலந்தாலோசனை நடத்தி உள்ளனர். நான்கு நாடுகள் இடையிலான பாதுகாப்பு உறவு மேலும் வலுவடைந்து வருகிறது.
இந்தியாவின் நம்பகமான கூட்டமைப்பாக குவாட் செயல்படுகிறது. கடல்சார் பாதுகாப்பு, விநியோக சங்கிலி, புதிய தொழில்நுட்பங்கள், பேரிடர் மேலாண்மையில் குவாட் நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றன.
இன்றைய கூட்டத்தின் மூலம் குவாட் கூட்டமைப்பு மேலும் வலுப்படும். நமது பரஸ்பர ஒத்துழைப்பு அதிகரிக்கும். இந்திய, பசிபிக் கடல்சார் பாதுகாப்புக்கான தீர்வுகளை குவாட் வழங்கும். குவாட் கூட்டமைப்பின் இலக்குகளை நம்மால் வெற்றிகரமாக எட்ட முடியும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பின்னர் மூடிய அறையில் 4 நாடுகளின் தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடல்சார் பாதுகாப்பு, அரிய வகை கனிமங்கள் குறித்து தீவிர ஆலோசனை நடத்தப்பட்டது.
தேசிய கொடிக்கு மரியாதை
குவாட் நாடுகளின் தலைவர்கள் மணிலாவில் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவரவர் வரிசையில் நிற்க தரைத்தளத்தில் அந்த நாடுகளின் தேசிய கொடிகள் பதிக்கப்பட்டு இருந்தன. பிரதமர் நரேந்திர மோடி மேடையில் ஏறியபோது இந்திய தேசிய கொடி தரையில் கிடப்பதை பார்த்தார். உடனடியாக கீழே குனிந்து தேசிய கொடியை எடுத்து தனது சட்டப்பையில் வைத்துக் கொண்டார்.
அப்போது அருகில் இருந்த அதிபர் ட்ரம்ப், “உங்கள் கொடியை பத்திரப்படுத்தி கொள்ளுங்கள்’’ என்று புன்னகையுடன் தெரிவித்தார். இதர 3 நாடுகளின் தலைவர்கள் அவரவர் நாடுகளின் தேசிய கொடி தரையில் பதிக்கப்பட்டிருந்ததை கவனத்தில் கொள்ளவில்லை. ஆனால் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் மூவர்ண கொடிக்கு மரியாதை செலுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மோடிக்கு புகழாரம் சூட்டிய ட்ரம்ப்
கடந்த 2017 ஜனவரி முதல் 2021 ஜனவரி வரை அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவி வகித்தார். அப்போது அவருக்கும் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நெருங்கிய நட்புறவு நீடித்தது.
கடந்த 2025-ம் ஆண்டு ஜனவரியில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் மீண்டும் பதவியேற்றார். அப்போது வரி விதிப்பு, ஆபரேஷன் சிந்தூர் உள்ளிட்ட விவகாரத்தில் அமெரிக்கா, இந்தியா இடையே கசப்புணர்வு ஏற்பட்டது. இந்தியாவின் நலன்களைக் காக்க பிரதமர் நரேந்திர மோடி மிகவும் உறுதியாக இருந்தார். அமெரிக்காவின் அழுத்தத்தை அவர் ராஜதந்திர முறைகளில் எதிர்கொண்டார்.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று நேருக்கு நேர் சந்தித்தார். அப்போது ட்ரம்ப் கூறும்போது, “பிரதமர் நரேந்திர மோடி மிகவும் திடமான மனிதர், மிகச் சிறந்த தலைவர், எனது மிக நெருங்கிய நண்பர்” என்று புகழாரம் சூட்டினார்.