

மல்லிகார்ஜுன கார்கே
புதுடெல்லி: தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக கார்கே எழுதியுள்ள கடிதத்தில், ‘தொகுதி மறுவரையறையை உள்ளடக்கிய அரசியலமைப்பு சட்டத் திருத்த மசோதாவை, வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
தொகுதி மறுவரையறை மசோதாவைத் தாக்கல் செய்யவேண்டும் என்றால் அதுதொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் என்று ஏற்கெனவே எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. அதற்கு வசதியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை மத்திய அரசு கூட்ட வேண்டும். இதுதொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜுவுக்கு ஏற்கெனவே கடிதம் எழுதியுள்ளேன்.
நாடாளுமன்றத்தில் அந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அதில் உள்ள அம்சங்கள் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என்றுதான் நாங்கள் கோரிக்கை வைக்கிறோம்.
மேலும், மக்களவையில் உள்ள இடங்களை 50 சதவீதம் அதிகரிக்கப் போவதாகவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக தென் மாநிலங்கள் கவலை தெரிவித்துள்ளன. இந்த விவகாரங்கள் தொடர்பாகவும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டும்.
எனவே, பிரச்சனைக்குரிய மசோதாக்கள், தொகுதி மறுவரையறை மசோதா உள்ளிட்ட விஷயங்களை விரிவாக கலந்து ஆலோசிக்க வசதியாக பிரதமர் நரேந்திர மோடி, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் கார்கே தெரிவித்துள்ளார்.