

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியில் முக்கிய முடிவுகள் எடுக்கும் உயர் அதிகார அமைப்பான செயற்குழுவின் கூட்டம் டிசம்பர் 27-ம் தேதி நடைபெற உள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தை கொண்டுவரும் அரசின் நடவடிக்கை மற்றும் தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
பிஹார் தேர்தலில் காங்கிரஸ் தோல்விக்கு பிறகு நடைபெறும் கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். மேலும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் 2026-ல் தேர்தலை எதிர்கொள்ளவிருக்கும் நிலையில் இக்கூட்டத்தில் இதற்கான வியூகம் வகுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மக்களிடம் இருந்து வேலைக்கான உரிமையை அரசு பறிப்பதாகவும் இதற்கு எதிராக நாடு தழுவிய இயக்கம் நடைபெறும் என்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.