

ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில், பறிமுதல் செய்யப்பட்ட 510 கிலோ கஞ்சா ஆவடி காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி முன்னிலையில் அழிக்கப்பட்டது.
ஆவடி: ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில், 90 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 510 கிலோ கஞ்சா, எரித்து அழிக்கப்பட்டது. ஆவடி காவல் ஆணையரக எல்லை பகுதிகளில், கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், ஆவடி காவல் ஆணையரகம் ஈடுபட்டு வருகிறது.
அதன்படி, ஆவடி காவல் ஆணையரகத்தின் கீழ் உள்ள காவல் நிலையங்கள், ஆவடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுகளில் கடந்த சில மாதங்களில் 90 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகள் தொடர்பாக கைதான வர்களிடமிருந்து 510 கிலோ எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிப்பதற்காக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டது. இதை தொடர்ந்து, ஆவடி காவல் கூடுதல் ஆணையர் பவானீஸ்வரி தலைமையில், காவல் துணை ஆணையர் பெரோஸ்கான் அப்துல்லா, தடய அறிவியல் துணை இயக்குநர் ஷோபியா ஜோசப் ஆகியோர் கொண்ட போதை பொருள் அழிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
அக்குழுவினர் மற்றும் ஆவடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆணையர் பொன்சங்கர் ஆகியோரால், நேற்று முன்தினம் செங்கல்பட்டு மாவட்டம், தென்மேல்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உள்ள இன்சுலேட்டரில், 510 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டது
மேலும், 2024 -ம் ஆண்டு 112 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.40 லட்சம் மதிப்புள்ள 399 கிலோ கஞ்சா மற்றும் 2025 -ம் ஆண்டு 581 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள 2,892 கிலோ கஞ்சா எரித்து அழிக்கப்பட்டுள்ளது.