

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, 'தி இந்து' நாளிதழில் ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் (எம்ஜிஎன்ஆர்இஜிஏ) புல்டோசர் அழிப்பு’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்வதற்காக, டாக்டர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது எம்ஜிஎன்ஆர்இஜிஏ திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்காக கடந்த 2005-ம் ஆண்டு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. இது அனைவருக்கும் நல்வாழ்வு கிடைக்க வேண்டும் என்ற மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கியது.
இந்நிலையில், நரேந்திர மோடி தலைமையிலான அரசு எவ்வித விவாதமோ, ஆலோசனையோ இல்லாமல் இந்த திட்டத்தை ஒழிக்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டது. இந்த திட்டத்தில் இருந்த மகாத்மா காந்தி பெயர் நீக்கப்பட்டு, விபி-ஜி ராம் ஜி என்ற பெயரில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வருவது கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தும். எனவே, அவர்களின் உரிமையை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.