

அகமதாபாத்: இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் மறுதேர்வு நடத்தப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் சதேஜ் பாட்டீல், அகமதாபாத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: “நீட் நுழைவுத் தேர்வை ஆண்டுதோறும் சுமார் 23 லட்சம் பேர் எழுதுகின்றனர். இந்த தேர்வில் பல்வேறு மோசடிகள் நடைபெறுகின்றன.
நீட் தேர்வை நடத்திய தேசிய தேர்வு முகமை (என்டிஏ) குறித்து உயர்நிலை விசாரணை நடத்தப்பட வேண்டும். வினாத்தாள் மோசடியில் தொடர்புடைய என்டிஏ அதிகாரிகளை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும். நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும்.
இதை வலியுறுத்தி ஜூன் 30ம் தேதி முதல் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும். மாணவர்களின் குரல் என்ற பெயரில் 28 முக்கிய நகரங்களில் 40 நாட்கள் தொடர் போராட்டங்கள் நடைபெறும். இறுதிக் கட்டமாக “டெல்லி சலோ” போராட்டம் ஆகஸ்ட் 9ம் தேதி நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.