

புதுடெல்லி: காங்கிரஸ் தலைமையுடன் ஒத்த கருத்துடன் பயணம் செய்கிறேன் என்று திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சி தலைமையின் ஆதரவு பெற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எதிராக சசி தரூர் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதன் பிறகு காங்கிரஸ் தலைமைக்கும் சசி தரூருக்கும் இடையே விரிசல் அதிகரித்து வந்தது. பிரதமர் மோடி தலைமையிலான அரசையும் பாராட்டி வந்தார்.
இந்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்து ஆலோசிக்க சோனியா காந்தி வீட்டில் நேற்று முன்தினம் நடைபெற்ற காங்கிரஸ் எம்பிக்கள் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்தார். அவர் பாஜகவில் இணைய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த சூழலில் நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் நேற்று சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இதன் பிறகு நிருபர்களிடம் சசி தரூர் கூறும்போது, “எல்லாம் நன்றாக உள்ளது. காங்கிரஸ் தலைமையுடன் ஒத்த கருத்துடன் பயணம் செய்கிறேன். நான் தற்போது எம்பியாக உள்ளேன். நாடாளுமன்ற விவகாரங்களில் மட்டும் கவனம் செலுத்துகிறேன். வேறு எந்த பதவிக்கும் ஆசைப்படவில்லை. கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்காக வழக்கம் போல பிரச்சாரம் செய்வேன்” என்று தெரிவித்தார்.