பிருத்விராஜ் சவுகான்| கோப்புப் படம்
புதுடெல்லி: ‘வெனிசுலா அதிபரை கடத்திச் சென்றதைப் போல நமது பிரதமரையும் ட்ரம்ப் கடத்திச் செல்வாரா?’ என காங்கிரஸ் மூத்த தலைவர் பிருத்விராஜ் சவுகான் பேசியதற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள வரிகள் குறித்துப் பேசிய மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான பிருத்விராஜ் சவுகான், ‘‘வெனிசுலாவில் நடந்ததைப் போன்ற ஒன்று இந்தியாவில் நடக்குமா என்பதுதான் இப்போது எழும் கேள்வி. டொனால்டு ட்ரம்ப், நமது பிரதமரை கடத்திச் செல்வாரா?’’ என்று தெரிவித்தார்.
அவரது இந்தக் கருத்துக்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். வெனிசுலாவுடன் அணு ஆயுத நாடான இந்தியாவை ஒப்பிடுவதா என்றும், நிகோலஸ் மதுரோவுடன் பிரதமர் மோடியை ஒப்பிடுவதா என்றும் பலரும் தங்கள் ஆதங்கத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் முன்னாள் டிஜிபி எஸ்.பி. வைத், பிருத்விராஜ் சவுகானை கடுமையாக சாடியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு எவ்வளவு விரக்தி உள்ளது என்பதை இது காட்டுகிறது. அதனால்தான் அவர்கள் இந்தியாவுக்கு எதிரான அறிக்கைகளை வெளியிடுகிறார்கள். இதைச் சொல்வதற்கு முன்பு உங்கள் தலை ஏன் வெட்கத்தால் குனியவில்லை? நீங்கள் இந்த நாட்டின் குடிமகன் இல்லையா?
வெனிசுலாவுக்கு ட்ரம்ப்பும் அமெரிக்காவும் செய்தது, வெனிசுலா மக்களுக்கு அவமானகரமானது. அது உங்கள் நாட்டிலும் நடக்க வேண்டும் என்று விரும்புகிறீர்களா? நீங்கள் மோடியை அவ்வளவு வெறுக்கிறீர்களா?’’ என்று பதிவிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கீழ்த்தரமாக இறங்குவதையே பிருத்விராஜ் சவுகானின் கருத்து வெளிப்படுத்துவதாக பாஜக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘‘காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவுகான், வெட்கமின்றி இந்தியாவின் நிலையை வெனிசுலாவுடன் ஒப்பிடுகிறார். வெனிசுலாவில் நடந்தது இந்தியாவிலும் நடக்குமா என்று கேட்டதன் மூலம் காங்கிரஸ் இந்தியாவுக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருப்பதை தெளிவுபடுத்துகிறது. ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் கட்சி தரம் தாழ்ந்து செல்வதையே இது காட்டுகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.