

கொல்லம்: கேரள பெண் எம்எல்ஏ பிரதீபா மீது காங்கிரஸ் கட்சி அவதூறு பிரச்சாரம் செய்து வருவதை கண்டிக்கிறோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கேரள மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலரும், கட்சியின் அரசியல் விவகாரக் குழு உறுப்பினருமான எம்.வி. கோவிந்தன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: காயங்குளம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்எல்ஏவாக சிறப்பாக பணியாற்றி வருபவர் பிரதிபா. கடந்த 10 ஆண்டுகளில் அவர் பல வளர்ச்சித் திட்டங்களைச் செய்துள்ளார்.
இந்நிலையில் அண்மையில் காயங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎஃப்) உள்ள இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) கட்சியைச் சேர்ந்த ஏ. இர்ஷாத், பிரதீபாவை அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார்.
சட்டப்படி நடவடிக்கை: அவரது பேச்சு ஆட்சேபிக்கத்தக்க வகையில் உள்ளது. இதற்கு நாங்கள் கடும் கண்டனம் தெரிவிக்கிறோம்.அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு எதிராக இவ்வாறு பேசுவது ஆட்சேபிக்கத்தக்கது. கேரளாவில் ஏராளமான இளம் பெண் தலைவர்கள் அரசியல் கட்சிகளில் உள்ள நிலையில், அவர்கள் மீது இவ்வாறு பேசுவது யுடிஎஃப் கட்சித் தலைவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது.
இதை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் அவர்களை நிறுத்துவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஏ.இர்ஷாத் பேச்சுக்கு முதல்வர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், அவரது பேச்சு குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.