

பெங்களூரு: கர்நாடக சட்டமேலவையில் காலியாக உள்ள 7 இடங்களுக்கான தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் ஒரு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு 28 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவைப்படுகின்றன. தற்போது உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப காங்கிரஸ் 4 இடங்களிலும், பாஜக 2 இடங்களில் எளிதாக வெற்றி பெறும்.
மஜதவுக்கு 19 எம்எல்ஏக்களின் வாக்குகளே இருக்கும் நிலையில், அக்கட்சி ஒரு வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அதேவேளையில் காங்கிரஸ் தங்களது கட்சியில் உபரியாக உள்ள 6 எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்களின் வாக்குகளை குறிவைத்து 5-வது வேட்பாளரை நிறுத்தியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கப் போவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து காங்கிரஸ் மேலிடம் தங்களது எம்எல்ஏக்களை பெங்களூருவை அடுத்துள்ள பிடதியில் சொகுசு விடுதியில் தங்க வைத்துள்ளது. முதல்வர் டி.கே.சிவகுமார் தலைமையில் நேற்று முன்தினம் இரவு நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் கட்சி மாறி வாக்களிக்கக் கூடாது என வலியுறுத்தப்பட்டது. எம்எல்ஏக்கள் தப்பிச் செல்லாமல் இருக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதேபோல மஜத எம்எல்ஏக்கள் 19 பேரும் பெங்களூருவில் ஒரு சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் தலைவரும் மத்திய அமைச்சருமான குமாரசாமி நேற்று எம்எல்ஏக்களை சந்தித்துப் பேசினார். அப்போது கட்சி மாறி வாக்களிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
இன்று சட்டமேலவை வாக்குப்பதிவு நடைபெறுவதால் இரு கட்சிகளின் எம்எல்ஏக்களும் அவர்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிகளில் இருந்து பேருந்துகள் மூலம் நேரடியாக தலைமைச் செயலகத்துக்கு பாதுகாப்புடன் அழைத்துவரப்பட உள்ளனர்.