‘‘அசாமில் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வந்துவிட்டது’’: ஹிமந்த பிஸ்வா சர்மா

‘‘அசாமில் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வந்துவிட்டது’’: ஹிமந்த பிஸ்வா சர்மா
Updated on
2 min read

குவஹாத்தி: அசாமில் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வந்துவிட்டது என்று அம்மாநில முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.

குவஹாத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய ஹிமந்த பிஸ்வா சர்மா, ‘‘காங்கிரஸ் கட்சியின் பவன் கெரா புதுடெல்லியிலும், கவுரவ் கோகாய் குவஹாத்தியிலும் நேற்று (ஏப். 05) செய்தியாளர்களைச் சந்தித்தனர். இந்த செய்தியாளர் சந்திப்புக்கான அனைத்துத் தகவல்களும் ஒரு பாகிஸ்தானிய சமூக ஊடக குழுவால் வழங்கப்பட்டவை என்பதை நாங்கள் கண்டறிந்துள்ளோம். கடந்த 10 நாட்களில் ஒரு பாகிஸ்தானிய தொலைக்காட்சி அசாம் தேர்தல் தொடர்பாக குறைந்தது 11 விவாத நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. இதற்கு முன் ஒருபோதும் இப்படி நடந்தது கிடையது.

விவாத நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும், காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற வேண்டும் என்பதாகவே அமைந்திருந்தது. நேற்றைய செய்தியாளர் சந்திப்புக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பு இருப்பது மிக தெளிவாகத் தெரிந்தது. சட்ட அமலாக்க நிறுவனங்கள் இந்த விவகாரத்தை நிச்யம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

பொதுவாக போலியான ஆவணங்களைக் கொண்டு பொது மக்கள் முன் ஒரு குறிப்பிட்ட விவகாரத்தை எழுப்பினால் அது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 420, 468 ஆகியவற்றின் கீழ் குற்றமாக கருதப்படும். ஒரு தேர்தலின் முடிவு அல்லது விளைவை மாற்றி அமைக்கும் நோக்கில் போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது அது இன்னும் கடுமையான பிரிவுகளின் கீழ் வரும். நேற்று எனது மனைவி இது தொடர்பாக ஒரு முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். காவல்துறை இந்த வழக்கைச் சட்டத்தின் உரிய பிரிவுகளின் கீழ் பதிவு செய்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

ஒரு பாகிஸ்தானிய சமூக ஊடகக் குழுவிடம் இருந்து பெறப்பட்ட பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களின் படங்களை காங்கிரஸ் கட்சியினர் பயன்படுத்தி உள்ளனர். கவுரவ் கோகாய்க்கு அந்த பாகிஸ்தானிய சமூக ஊடகக் குழு உதவி செய்துள்ளது. அசாம் தேர்தலில் பாகிஸ்தான் தலையிட முயல்கிறது என்பது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சினையாகும். பாகிஸ்தானின் சமூக ஊடகக் குழுவின் உதவியை கவுரவ் கோகாய் ஏன் பெற்றார். எங்களைப் பற்றி என்னவெல்லாம் கூறப்பட்டதோ அவை அனைத்துக்கும் நாங்கள் நீதிமன்றத்தை நாடுவோம். ஆனால், எனது முக்கிய கேள்வி பாகிஸ்தான் ஏன் கவுரவ் கோகாய்க்கு உதவுகிறது என்பதுதான்.

அசாமில் காங்கிரஸ் கட்சி முழுமையாக முடிவுக்கு வந்துவிட்டது. நேற்று நான் இந்த குற்றச்சாட்டை வைத்த பிறகு என்டிஏவுக்கான வெற்றி வாய்ப்புள்ள இடங்களின் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது. இது ஒரு அறிகுறி மட்டுமே. காலையில் 94 ஆக இருந்த எண்ணிக்கை இரவுக்குள் 99 ஆக உயர்ந்துவிட்டது. இது ஒரு அறிகுறி மட்டுமே’’ என தெரிவித்தார்.

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பவன் கெரா, ‘‘ஹிமந்த பிஸ்வா சர்மாவின் முழு அரசியலுமே முஸ்லிம்களுக்கு எதிரானது. ஆனால், எப்படி அவரது மனைவி இரண்டு இஸ்லாமிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளைக் கொண்டுள்ளார். இந்திய சட்டப்படி இங்கு பிறந்த ஒருவர் இரட்டை குடியுரிமை வைத்திருக்க முடியாது. ஆனால், ரின்கி பூயான் சர்மா இத்தனை குடியுரிமை சான்றிதழ்களை வைத்திருப்பது எப்படி?’’ என கேள்வி எழுப்பி இருந்தார்.

‘‘அசாமில் காங்கிரஸ் கட்சி முடிவுக்கு வந்துவிட்டது’’: ஹிமந்த பிஸ்வா சர்மா
“என்னை தவிர யாரும் உங்களுக்கு உதவ மாட்டார்கள்!” - கேள்வி கேட்ட மக்களுக்கு ரங்கசாமி சொன்ன பதில்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in