

ஜெய்ராம் ரமேஷ்
புதுடெல்லி: தீவிரவாத சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அமெரிக்க கூலிப்படையைச் சேர்ந்த மேத்யூ ஆரோன் வான் டைக் தனது குடும்பத்தினரை சந்திப்பதற்காக ஒரு மாதம் சொந்த நாடு செல்ல டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்திய அரசு அடிபணிந்துவிட்டதாகக் கூறி காங்கிரஸ் கட்சி பிரதமர் மோடி மீது கடும் தாக்குதலைத் தொடுத்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மியான்மர் கிளர்ச்சிக் குழுக்களுக்கு ஆயுதம் மற்றும் டிரோன் போர்முறை பயிற்சி அளித்ததாக ஆரோன் வான் டைக் தேசியப் புலனாய்வு முகமையால் (என்ஐஏ) கைது செய்யப்பட்டார்.
டெல்லி சிறப்பு என்ஐஏ நீதிமன்றம், செப்டம்பர் 18 அன்று வான் டைக்குக்கு சட்டப்படியான பிணை வழங்கியதுடன், செப்டம்பர் 24 அன்று அவர் ஒரு மாதம் சொந்த நாடு செல்லவும் அனுமதி அளித்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அமெரிக்காவின் அழுத்தத்திற்கு மத்திய அரசு அடிபணிந்துவிட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
“சமரசம் செய்துகொள்ளும் பிரதமர் மீண்டும் அதைச் செய்துள்ளார்” என்று எக்ஸ் தளத்தில் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்ததுடன், வழக்கில் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டப் பிரிவுகள் நீக்கப்பட்டது ஏன் என்றும், வெளிநாட்டினர் முறையான அனுமதியின்றி இந்தியாவுக்குள் நுழைந்து பயணிக்க எப்படி அனுமதிக்கப்பட்டனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் தலைவர் பவன் கேரா, “முறையான அனுமதியின்றி மியான்மர் சென்று ஆயுதப் பயிற்சி அளித்த அமெரிக்க கூலிப்படையை சேர்ந்தவரான வான் டைக் மட்டும் சொந்த நாட்டுக்குச் செல்ல அனுமதிப்பது எப்படி” என்று கேள்வி எழுப்பினார். மேலும், அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைவிலங்குடன் நாடு கடத்தப்படுவதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டுச் சட்டப் பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருந்தாலும், தீவிர விசாரணை தொடர்வதாக என்ஐஏ தெரிவித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கத் தூதரக அழுத்தத்தாலேயே இந்தத் தளர்வுகள் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.