

அதிமுக எம்.பி. இன்பதுரை
சென்னை: அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்தை குறிப்பிட்டு தவெக அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய வேண்டும் என்று அதிமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: அதிமுக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியை சந்தித்து ஒரு மனு அளித்துள்ளோம். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுகையில், ‘விசில் சின்னமும் இரட்டை இலைச் சின்னமும் ஒன்றுதான். அதிமுகவின் தலைவர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் விசில் சின்னத்தில் வாழ்கிறார்கள்’ என்று கூறினார்.
இது இந்திய தேர்தல் சட்டவிதிகளுக்கு எதிரானது. தேர்தல் சின்னம் ஒரு கட்சியின் அடையாளத்துக்காகதான் வழங்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு சின்னம் வழங்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது.
அதன்படி, அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள தவெக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக மாறியுள்ளது. அதற்கும் ஒரு தனிச் சின்னம் உள்ளது. அவ்வாறு இருக்கும்போது, இரட்டை இலைச் சின்னத்தை ஏன் திருட வேண்டும்.
இது வாக்காளர்களை குழப்பும் செயலாகும். பொது மக்கள் இதை எவ்வாறு புரிந்து கொள்வார்கள் என்றால் அதிமுகவும் விசிலும் ஒன்று சேர்ந்து விட்டது என நினைப்பார்கள். அதிமுகவுக்கு வாக்களிக்க நினைப்பவர்கள் விசிலுக்கு வாக்களித்துவிடுவார்கள். இதை தேர்தல் ஆணையம் கண்காணிக்க வேண்டும்.
தவெக செய்வது மக்களை திசைதிருப்பும் செயல். ஜனநாயகத்தில் ஒரு கட்சியை, அதன் கொள்கைகளை விமர்சிக்கலாம். ஆனால், ஒரு கட்சியின் சின்னத்தை களவு செய்வதை இப்போதுதான் பார்க்கிறேன். இது தவறான வழிகாட்டுதல். எனவே ஆதவ் அர்ஜுனா பேச்சை ஆய்வு செய்து 16ஏ சட்டப்படி தவெகவுக்கு நோட்டீஸ் கொடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம் உடனே அவர்களை அழைத்து விசாரணை செய்ய வேண்டும். குறிப்பாக தவெகவுக்கு கொடுத்த அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
முதலில் அதிமுகவின் வெற்றியை திருடினார்கள், பின்னர் எங்களது கட்சியின் எம்எல்ஏக்களை திருடினார்கள், தற்போது கட்சியையே திருடுகிறார்கள். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை கண்டிப்பாக நாடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.