

பெங்களூரு: கர்நாடகாவின் பெல்லாரியில் பேனர் வைப்பதில் காங்கிரஸ், பாஜக எம்எல்ஏக்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 2 பாஜக எம்எல்ஏக்கள் உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம், ஹவம்பாவில் காங்கிரஸ் பிரமுகர் செனல் சேகர் ஜனவரி 3-ம் தேதி வால்மீகி சிலை அமைக்க திட்டமிட்டார். பெல்லாரி காங்கிரஸ் எம்எல்ஏ நரபரத் ரெட்டியின் தீவிர ஆதரவாளரான இவர் நேற்று முன்தினம் இரவு 8.30 மணியளவில் வால்மீகி சதுக்கம் பகுதியில் பேனர் அமைத்தார். இந்த பேனர், கங்காவதி பாஜக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான ஜனார்த்தன ரெட்டியின் வீட்டுக்கு எதிரில் இருந்தது.
இதனை ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளர்களும் பாஜகவினரும் கிழித்து எறிந்தனர். இதனால் காங்கிரஸ் எம்எல்ஏ நரபரத் ரெட்டியின் ஆதரவாளர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் கற்கள், உருட்டு கட்டைகளால் தாக்கினர். இதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அப்போது ஜனார்த்தன ரெட்டியின் நெருங்கிய நண்பரும் பாஜக பிரமுகருமான சதீஷ் ரெட்டியின் மெய்க்காப்பாளர் பசவராஜ் துப்பாக்கியால் சுட்டதில் காங்கிரஸ் பிரமுகர் ராஜசேகர் (32) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விரைந்து வந்த பெல்லாரி போலீஸார் தடியடி நடத்தி மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இரு தரப்பினரும் நடத்திய கல்வீச்சில் 3 போலீஸார் காயமடைந்தனர்.
பதற்றமான சூழல் நிலவுவதால் ஹசம்பாவியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அங்கு 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
11 பேர் மீது வழக்குப்பதிவு: இந்நிலையில் பெல்லாரி போலீஸார் பாஜக எம்எல்ஏக்கள் ஜனார்த்தன ரெட்டி, ராமலு, முன்னாள் அமைச்சர் சோமசேகர் ரெட்டி உட்பட 11 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.