

புதுடெல்லி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 தொகுதிகளைப் பெற்ற தவெக தலைவர் விஜய்யை ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேக்கர் அழைப்பு விடுக்கவில்லை. இதனால் குழப்பம் நிலவுகிறது.
இதுபோன்ற சர்ச்சைகளின் போது, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பே பெரிதும் விவாதிக்கப்படுகிறது. கடந்த 1994-ல் வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பில், ஒரு ஆட்சிக்குப் பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை சட்டப்பேரவையில்தான் அறிய முடியும். ஆளுநர் மாளிகையில் இல்லை. பெரும்பான்மை ஆதரவு உள்ளதா என்பதை, ஆளுநர் தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளின் அடிப்படையிலோ அல்லது சொந்தக் கணிப்பின் அடிப்படையிலோ தீர்மானிக்க இயலாது என்று உறுதிபடக் கூறியிருந்தது.
அதன்பின்னர், பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரத்தில் சட்டப்பேரவையில் வாக்கெடுப்பு நடத்தி முடிவு எடுப்பது என்றானது. நம்பிக்கை வாக்கெடுப்பு இந்திய அரசியலில் ஒரு அரசியலமைப்பு மரபாக மாறியது. பிறகு கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தராகண்ட் மற்றும் மத்திய பிரதேசம் போன்ற பல வழக்குகளில், உச்ச நீதிமன்றம் பொம்மை தீர்ப்பை மேற்கோள் காட்டி, உடனடி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டதும் நடந்தேறின.
இதற்கு பல முன் உதாரணங்கள் உள்ளன. கடைசியாக மகாராஷ்டிராவில் கடந்த 2019-ல் நடைபெற்ற தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியானது. அப்போது, சிவசேனாவில் உருவானப் பிளவு பாஜக கூட்டணியின் பெரும்பான்மைக் கணக்கீடுகளைக் குழப்பியது. எனினும் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அஜித் பவார் ஆகியோர் திடீரென பதவியேற்றனர்.
தங்களுக்கு என்சிபியின் ஆதரவு இருப்பதாக இவர்கள் கூறியதை எதிர்க்கட்சிகள் எதிர்த்தனர். உச்ச நீதிமன்றம் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முன்பே பாஜக கூட்டணி அரசு கவிழ்ந்தது. பின்னர், சிவசேனா - காங்கிரஸ் - என்சிபி கூட்டணி அரசு அமைந்தது.
அதற்கும் முன்பாக 2018-ல் கர்நாடக தேர்தலில் 112 பெரும்பான்மைக்கு,104 தொகுதிகளுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது பாஜக. இக்கட்சியின் எடியூரப்பா அரசு அமைக்க அழைக்கப்பட்டார். அப்போது, காங்கிரஸும் ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்து பெரும்பான்மை உள்ளதாக கூறியது. உச்ச நீதிமன்றத்தை எட்டிய இந்த வழக்கில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடப்பட்டது.
அதில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், எடியூரப்பா பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கோவாவில் 2017-ல் காங்கிரஸ் 17 தொகுதிகளுடன் தனிப்பெரிய கட்சியானது. பாஜகவிடம் 13 இடங்கள் மட்டுமே இருந்தன. அத்துடன், பிராந்திய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவை பாஜக விரைவாகப் பெற்றது.
இச்சூழலில் ஆளுநர், காங்கிரஸுக்குப் பதிலாக பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார். முதல்வரான மனோகர் பாரிக்கருக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான களம் சட்டப்பேரவைதான் என உச்ச நீதிமன்றமும் தீர்ப்பளித்தது. மணிப்பூரில் 2017-ல் காங்கிரஸ் தனிப் பெரும் கட்சியான நிலையில், பாஜக சிறிய கட்சிகளின் ஆதரவைத் திரட்டி பெரும்பான்மை பெற்றது.
அப்போது பாஜகவின் என்.பிரேன் சிங்கே ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2005-ல் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றதாகக் கூறியது. ஆனால், சிபு சோரனுக்கு அரசு அமைக்க முதல் வாய்ப்பு கிடைத்தது. உச்ச நீதிமன்றம் சென்ற இந்த வழக்கிலும் நம்பிக்கை வாக்கெடுப்பு மூலம் தீர்க்கப்பட்டது.
எனவே, இதர மாநிலங்களில் அமைந்த ஆட்சிகளை முன் உதாரணமாகக் கொண்டால், இறுதிச் சோதனையாக அமைவது எஸ்.ஆர்.பொம்மை வழக்கின் தீர்ப்பே. இந்தச் சூழ்நிலையில், ஒரு அரசுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை சட்டப்பேரவையில் தான் தீர்மானிக்க முடியும் என்பது சட்ட ரீதியாக உள்ளது.