

தாக்குதலில் உயிரிழந்த யோகேஷ்
பெங்களூரு: பெங்களூருவில் 19 வயது கல்லூரி மாணவர் ஒருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் சக மாணவர்கள் இருவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூருவில் உள்ள நாகர்பாவியை சேர்ந்தவர் புவனேஷ் குமார் (47). இவரது மகன் யோகேஷ் (19) இங்குள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் யோகேஷ் வகுப்பறையில் இருந்த போது, அவரது சக மாணவர் ரமேஷ் குமார் (19) கல்லூரிக்கு பின்புறம் வருமாறு அழைத்து சென்றுள்ளார்.
அங்கிருந்த சக மாணவர்கள் புவன் (20), அர்ஜூன் (19) உள்ளிட்ட 6 பேர் அவருடன் சண்டையிட்டு கத்தியால் குத்தியுள்ளனர். ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த யோகேஷை சக மாணவர்கள் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த நாகர்பாவி போலீஸார், யோகேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விக்டோரியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கொலை வழக்குப்பதிவு செய்து, சக மாணவர்கள் புவன் (20), அர்ஜூன் (19) உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், “முதற்கட்ட விசாரணையில் சிறிய விஷயத்துக்காக ஏற்பட்ட வாக்குவாதம் கொலையில் முடிந்திருக்கிறது. அங்குள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் 6 பேரை கைது செய்திருக்கிறோம்” என்றார்.