

காக்ரோச் ஜனதா கட்சி நிறுவனர் அபிஜீத் தீப்கே
புதுடெல்லி: சிபிஎஸ்இ மற்றும் நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக டெல்லியில் நடத்தப்படவுள்ள அமைதிப் போராட்டத்திற்கான அடுத்தகட்ட திட்டங்களை, ஆன்லைன் இயக்கமான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (காக்ரோச் ஜனதா கட்சி) நிறுவனர் அபிஜீத் தீப்கே நேற்று வெளியிட்டுள்ளார்.
தற்போது அமெரிக்காவில் மாணவராக இருக்கும் அவர், ஜூன் 6ம் தேதி இப்போராட்டத்திற்காக இந்தியா திரும்ப உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ பதிவில் அவர் கூறியுள்ளதாவது: வினாத் தாள் கசிவு காரணமாக நீட் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களுக்கும், லட்சக் கணக்கான மாணவர்களின் கடின உழைப்பு வீணடிக்கப்பட்டதற்கும் பொறுப்பேற்று, தர்மேந்திர பிரதான் உடனடியாகப் பதவி விலக வேண்டும்.
இதற்காக போராட்டம் நடத்துவதற்காக, ஜூன் 6ம் தேதி, சனிக்கிழமை காலை நான் டெல்லி வர முடிவு செய்துள்ளேன். நீங்கள் அனைவரும் என்னை விமான நிலையத்திற்கு வந்து சந்தியுங்கள். நாம் அனைவரும் அங்கிருந்து நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்திற்குச் சென்று, ஜந்தர் மந்தரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கான அனுமதியைக் கோருவோம்.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தால், அவர்கள் கண்டிப்பாகச் செவிசாய்த்தே ஆக வேண்டும். எனது இந்த நடவடிக்கைகளால் நான் கைது செய்யப்படலாம் என்று எனது நண்பர்களும் குடும்பத்தினரும் அச்சமடைந்துள்ளனர். நமது நாடு இன்னும் ஒரு ஜனநாயக நாடாகவே நீடிக்கிறது. அமைதியான முறையில் போராட நமக்கு அனுமதி கிடைக்கும் என்றும் நான் நம்புகிறேன். இவ்வாறு தீப்கே தெரிவித்துள்ளார்.