

புதுடெல்லி: கடந்த 2017-ல் உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் மதரஸாக்களில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை அரசு செய்து வருகிறது. மதரஸா கல்வியை நவீனமாகவும் உயர்தரமாகவும் பயனுள்ளதாகவும் மாற்ற வேண்டும் என்பது முதல்வர் யோகி அரசின் நோக்கமாக உள்ளது.
இந்நிலையில் இந்த ஆண்டு மதரஸா வகுப்புகளில் இடை நிலையான முன்ஷி மற்றும் மவுல்வி மேல்நிலையான ஆலிம் ஆகிய தேர்வுகளில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்கள் லக்னோவுக்கு அழைக்கப்பட்டு முதல்வர் யோகியால் கவுரவிக்கப்பட உள்ளனர். இவர்களில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு ‘டேப்லெட்' கணினி பரிசாக அளிக்கப்பட உள்ளது.
2025- 26 கல்வி ஆண்டுக்கான உ.பி. அரசின் மதரஸா வாரியத் தேர்வுகள், கடந்த பிப்ரவரி 9 முதல் 14 வரை நடைபெற்றன. வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும், முறைகேடுகளை தடுக்கவும், தேர்வு மையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்பட்டது. பதிவு செய்திருந்த 80,933 மாணவர்களில் 63,211 பேர் தேர்வு எழுதினர். அவர்களில் 55,788 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.
மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் தானிஷ் ஆசாத் அன்சாரி கூறுகையில், “தரமான கல்வியை வழங்குவதில் யோகி அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் இக்கல்வி நிறுவனங்களில் பயில்வதால், மதரஸா கல்வி என்பது வெறும் சம்பிரதாயமாக மட்டுமே நின்றுவிடக் கூடாது. அத்தகைய மாணவர்களுக்குச் சிறந்த மற்றும் நவீனக் கல்வி வழங்கப்பட வேண்டும். இது அவர்களின் அடிப்படை உரிமை" என்றார்.
சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நவீனக் கல்வி பெறுவதை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் உறுதி செய்யக் கோரி வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி, 'ஒரு கையில் குர்ஆனும், மறு கையில் கணினியும்' என்ற தொலை நோக்குப் பார்வைக்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.