

லக்னோ: உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில், போலீஸ் சிந்தனை மாநாடு 2 நாட்கள் நடைபெற்றது.
கடைசி நாளான நேற்று முதல்வர் ஆதித்யநாத் பேசியதாவது: “மற்ற மாநிலங்களில் உத்தர பிரதேச மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலை ஒரு முன்மாதிரியாக எடுத்துக் காட்டப்படுகிறது. உ.பி.யில் என்னென்ன சாதிக்க முடியும் என்பதை செய்து காட்டியிருக்கிறோம். அவற்றை மற்ற மாநிலங்கள் மாதிரிகளாக காட்ட முயற்சிக்கின்றன. ‘உ.பி. மாடல் வந்துவிட்டது’ என்று ஊடகங்கள் சொல்கின்றன.
பிரதமர் மோடியின் தொலை நோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, ஸ்மார்ட் காவல் துறை உருவாகி உள்ளது. இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள், முக்கிய ஆவணங்களாக இருக்கும். மாநிலத்தில் பாதுகாப்பு மட்டும் இருந்திருக்காவிட்டால், இந்தளவுக்கு உள்கட்டமைப்புகள் மேம்பட்டிருக்காது.
உ.பி.யில் பல எக்ஸ்பிரஸ் நெடுஞ்சாலைகள், பல்வேறு நகரங்களுக்கு விமான சேவை, ரயில் போக்குவரத்து என அனைத்தும் மேம்பட்டிருக்கின்றன. கடந்த எட்டரை ஆண்டுகளில் உ.பி. மாறியுள்ளது என்று மக்கள் பேசுகின்றனர். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நன்றாக இருப்பதால் முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இந்த சூழ்நிலையில், போலீஸார் மக்கள் நலன் சார்ந்த, மக்களுடன் ஒருவராக இருந்து செயல்பட வேண்டும்.
உளவுத்துறை தான் நமது மிகப்பெரிய ஆயுதம். எனவே, மக்கள், மக்கள் பிரதிநிதிகளுடன் போலீஸார் தொடர்புகளை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு ஆதித்யநாத் பேசினார். முன்னதாக, சைபர் குற்றங்கள், ஆள் கடத்தல், சமூக வலைதளங்களால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்வதற்கான கொள்கைகளை வகுக்க இந்த மாநாட்டை முதல்வர் ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா கூறும்போது, ”வழக்கமான போலீஸ் வாரம் போல் இல்லாமல், இந்த முறை சிறந்த பலன்களை அளிக்கும் வகையில் மாநாடு நடத்தப்பட்டது” என்றார்.