

பிஎஸ்எஃப் | கோப்புப் படம்
புதுடெல்லி: வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்கள் மேகாலயா எல்லை வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாக வெளியான டாக்கா பெருநகர காவல்துறையின் செய்தியை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) நிராகரித்துள்ளது.
வங்கதேச மாணவர் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி கொலை வழக்கில் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்களும் வங்கதேசத்தின் ஹலுவாகாட் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக டாக்கா பெருநகர காவல்துறை கூறியது.
இதுகுறித்து 'தி டெய்லி ஸ்டார்' வெளியிட்ட செய்தியில் டாக்கா கூடுதல் ஆணையர் எஸ்.என். நஸ்ருல் இஸ்லாம், “எங்களுக்குக் கிடைத்த தகவலின்படி, சந்தேக நபர்கள் ஹலுவாகாட் எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர். எல்லையைக் கடந்ததும், அவர்களை முதலில் ஒரு நபர் வரவேற்றுள்ளார். பின்னர், ஒரு வாடகை கார் ஓட்டுநர் அவர்களை மேகாலயாவில் உள்ள துரா நகரத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்” என்று கூறியதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த செய்தியை பிஎஸ்எஃப் மறுத்துள்ளது. இந்தியா-வங்கதேச எல்லையைப் பாதுகாக்கும் பிஎஸ்எஃப், மேகாலயா பகுதியில் எந்தக் கைது நடவடிக்கையோ அல்லது சட்டவிரோத எல்லை தாண்டிய நடமாட்டமும் இல்லை என்றும் கூறியுள்ளது.
இதுபற்றி பேசிய மேகாலயா பிஎஸ்எஃப் தலைவர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஓ.பி. உபாத்யாய், “இந்த செய்தி முற்றிலும் தவறானது, புனையப்பட்டது மற்றும் திசைதிருப்பும் தன்மை கொண்டது. இதனை உறுதி செய்ய எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார்.
சந்தேக நபர்கள் இந்தியாவுக்குள் நுழைந்த பிறகு மேகாலயா காவல்துறை அவர்களைக் கைது செய்ததாக வங்கதேச ஊடகங்களில் வெளியான செய்திகள் குறித்து அவரிடம் கேட்டபோது, “மூன்று நாட்களுக்கு முன்புதான், வங்கதேச ஊடகங்களில் இத்தகைய செய்திக்கு ஆதாரம் எதுவும் இல்லை என்று ஒரு காவல்துறை ஐஜி கூறியதாக செய்தி வெளியிட்டன.
இப்போது, ஒரு டிஐஜி முரண்பட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். மேகாலயா காவல்துறை அந்த நபர்களைக் கைது செய்ததாகக் கூறப்பட்டது, ஆனால் அதனை சரிபார்த்தபோது, மேகாலயா காவல்துறை இந்த தகவலை மறுத்தது. இதுகுறித்து வங்கதேச ஊடகங்களில் வரும் அனைத்து செய்திகளும் தவறானவை.
வங்கதேசத்தில் விரிவான சிசிடிவி கண்காணிப்பு மற்றும் சோதனைச் சாவடிகள் இருந்தபோதிலும், சந்தேக நபர்கள் டாக்காவிலிருந்து கிட்டத்தட்ட 300 கி.மீ தொலைவில் உள்ள ஒரு இடத்திலிருந்து இந்தியாவுக்குள் நுழைந்ததாகக் கூறுவது மிகவும் நம்பத்தகாதது. எனவே, இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் சாத்தியமற்றவை, முற்றிலும் தவறானவை மற்றும் புனையப்பட்டவை” என்றார்.