

புதுடெல்லி: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் நேற்று முன்தினம் நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணி தடுத்து நிறுத்தப்பட்டது. அன்றைய தினம் இரவு சிஜேபி ஆதரவாளர்கள் மீண்டும் ஜந்தர் மந்தரில் குவிந்தனர். நள்ளிரவு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பேரணியின்போது காயமடைந்த போராட்டக்காரர்கள் டெல்லி ஆர்எம்எல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, வேணுகோபால் உள்ளிட்டோரும் நேற்று ஆர்எம்எல் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்துப் பேசினர்.
இதனிடையே சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே டெல்லி ஜந்தர் மந்தரில் நேற்று மீண்டும் உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஜந்தர் மந்தரில் எங்களது போராட்டம் தொடர்கிறது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும். நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்த மாணவ, மாணவியரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடுவோம்.
மத்திய அரசு எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த விரும்பினால் ஜந்தர் மந்தருக்கு வரலாம். நாங்கள் நீண்ட போராட்டத்துக்கு தயாராக உள்ளோம். எங்கள் நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று ஜந்தர் மந்தருக்கு நேரில் சென்று போராட்டக் குழு தலைவர்களை சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்ற பேரணியில் பங்கேற்ற போராட்டக்காரர்கள், மந்திர் மார்க் போலீஸ் நிலையத்தில் உள்ளனர். அவர்களை விடுவிக்க ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால் வழக்கறிஞர்களுடன் போலீஸ் நிலையத்துக்கு சென்றார். ஆனால் பேரணியின்போது போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டதற்கு வலுவான சாட்சியங்கள் உள்ளன. அவர்களை விடுவிக்க முடியாது என்று போலீஸார் தெரிவித்தனர்.