ஜந்தர் மந்தர் போராட்டம்: சவுரவ் தாஸ், அசுதோஷ் உள்ளிட்டோருக்கு 5 நாள் நீதிமன்றக் காவல்

ராகுல் காந்தி கண்டனம்
ஜந்தர் மந்தர் போராட்டம்: சவுரவ் தாஸ், அசுதோஷ் உள்ளிட்டோருக்கு 5 நாள் நீதிமன்றக் காவல்
Updated on: 
2 min read

புதுடெல்லி: தடையை மீறி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முயன்றது, காவல்துறையினர் தங்கள் கடமைகளைச் செய்வதற்கு இடையூறு விளைவித்தது ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் சிஜேபி தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் 5 நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மத்திய டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர், போராட்டங்கள் நடத்துவதற்கான இடங்களின் பட்டியலில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது. இதற்கு மாற்றாக வேறு சில இடங்கள் அறிவிக்கப்பட்டன.

இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த சிஜேபி, கடந்த 13-ம் தேதி தடையை மீறி ஜந்தர் மந்தரில் நுழைந்து போராட்டம் நடத்த முயன்றது. அப்போது அங்கு காவலில் இருந்த போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே உள்ளிட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது, பிஎன்எஸ் பிரிவுகள் 223 (ஏ), 332, 61(2) ஆகிய பிரிவுகளின் கீழ் கன்னாட் பிளேஸ் காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்துள்ளது. இதேபோல், நாடாளுமன்ற வீதி காவல்நிலையம் இவர்கள் மீது, 221, 115(2), 132, 121(1), 3(5) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதையடுத்து, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா, அஜிங்கியா ஷிண்டே ஆகிய மூவரும் சிறப்பு நிர்வாக நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, அவர்கள் விடுவிக்கப்பட்டால் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடலாம் அல்லது மற்றவர்களை அவ்வாறு செய்யத் தூண்டலாம் என்பதை கருத்தில் கொண்டு சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோரை 5 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நிர்வாக நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அஜிங்கியா ஷிண்டே, ரூ.5,000 மதிப்பிலான தனிப்பட்ட பிணை மற்றும் ஜாமீன் பத்திரம் ஆகியவற்றைச் சமர்ப்பித்து, ஆறு மாதங்களுக்கு அமைதியாகவும் நன்னடைத்தையுடனும் இருப்பேன் என உறுதியளித்ததை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் ஐந்து நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டதற்கு சிஜேபி நிறுவனத் தலைவர் அபிஜித் தீப்கே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் பதிவில், “நரேந்திர மோடிக்கு நான் ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். நாட்டில் அவசரநிலையை அமல்படுத்த நீங்கள் விரும்பினால், அதை அதிகாரப்பூர்வமாகச் செய்யுங்கள். ஜந்தர் மந்தரில் தேசியக் கொடியை அசைத்ததற்காகவே ஐந்து நாட்கள் காவலில் வைக்கும் வகையிலான ஒரு அதிகாரப்பூர்வமற்ற அவசரநிலையை நீங்கள் ஏன் அமல்படுத்துகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜந்தர் மந்தரில் அமைதியான போராட்டத்தின்போது தேசியக் கொடியை அசைப்பது குற்றமல்ல. இதற்காக இளைஞர்களைச் சிறையில் அடைப்பது கோழைத்தனமான செயலாகும். மாணவர்கள், இளைஞர்கள், பத்திரிகையாளர்கள், இண்டியா கூட்டணியினர் என பல்வேறு தரப்பினர் வெவ்வேறு அமைப்புகளாக போராடினாலும் அனைவரின் நோக்கமும் ஒன்றுதான். அது தங்கள் அரசிலமைப்பு சார்ந்த உரிமைகளை வலியுறுத்தும் மக்களின் போராட்டமாகும். ஜந்தர் மந்தர் இந்திய மக்களுக்குச் சொந்தமானது. அதை நாங்கள் மீட்டெடுப்போம்.” என தெரிவித்துள்ளார்.

ஜந்தர் மந்தர் போராட்டம்: சவுரவ் தாஸ், அசுதோஷ் உள்ளிட்டோருக்கு 5 நாள் நீதிமன்றக் காவல்
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம்: முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in