

புதுடெல்லி: டெல்லியில் இரண்டாவாது நாளாக காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) போராட்டம் அறிவித்துள்ளது. இதனையொட்டி சிஜேபி தேசிய அமைப்பு பொறுப்பாளர் அஜிங்கிய ஷிண்டே அனைவரையும் ஜந்தர் மாந்தருக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, இன்று மற்றொரு போராட்டத்தை அறிவித்துள்ளது சிஜேபி. இன்று காலை தங்கள் தொண்டர்களுடன் மீண்டும் ஜந்தர் மந்தரை நோக்கிப் பேரணி நடத்த சிஜேபி முடிவு செய்துள்ளது.
ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டத்திற்குத் தலைமை தாங்க, கட்சியின் தேசிய அமைப்புப் பொறுப்பாளர் அஜிங்கிய ஷிண்டேவை சிஜேபி நியமித்துள்ளது. போராட்டத்தைத் தொடர்வதாக அறிவித்த ஷிண்டே, அனைவரும் ஜந்தர் மந்தருக்கு வந்து சேருமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த ஜூலை மாதம் ஜந்தர் மந்தரில் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக நடைபெற்ற சிஜேபியின் போராட்டம் வெற்றி பெற்றது. இதில், மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த பிரதான் தன் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இந்த போராட்டம் மூலம் சிஜேபியிடம் பாடம் கற்றுக்கொண்ட காவல்துறை, சனிக்கிழமையன்று தலைநகரில் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தது. இதனால் போராட்டக்காரர்களால் புது டெல்லிக்குள்ளேயே நுழைய முடியவில்லை.
சுமார் 35,000 மத்திய காவல் படைகளும், டெல்லி காவல்துறையின் 15,000 காவலர்களும் டெல்லியை கூண்டாக மாற்றி கையில் எடுத்தனர். இதனால், ஜந்தர் மந்தரை அடைவது என்பது சாத்தியமற்றதாகிவிட்டது.
கடுமையானப் பாதுகாப்பால் சிஜேபி தொண்டர்களால் டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த முடியவில்லை. எனினும், தாம் தடுக்கப்பட்ட இடங்களிலேயே நின்று சிஜேபியினர் கோஷமிட்டு போராட்டம் நடத்தினார்.
சிஜேபியின் இந்த போராட்டத்திற்கு முன்னாள் முதல்வர்களான அரவிந்த் கேஜ்ரிவால், மம்தா பானர்ஜி, பினராயி விஜயன் மற்றும் மணிக் சர்க்கார் ஆகிய நால்வரும் ஆதரவளித்தனர். இவர்களும் சிஜேபியுடன் போராட்டக் களத்தில் குதித்தனர்.
இருப்பினும், இந்த முன்னாள் முதல்வர்களையும் டெல்லி காவல்துறையினர் கைது செய்து தடுத்து நிறுத்தி விட்டனர். இந்தக் கைது நடவடிக்கைகள் சிஜேபியின் போராட்டத் திட்டங்களைத் தடுத்ததுடன், அதன் ஆதரவாளர்களின் மன உறுதியையும் குலைத்தன.
காவல்துறையினருடன் ஏற்பட்ட சில மோதல்கள் மற்றும் சிறு வாக்குவாதங்களுக்குப் பிறகு, சிஜேபியினரும் காவலில் எடுக்கப்பட்டனர். இம்முறை சிஜேபிக்கு நாட்டின் பாலிவுட் உள்ளிட்ட முக்கியப் பல பிரபலங்களும் ஆதரவளித்து போராட்டத்தில் இறங்கினார்.
இதன் தாக்கம் நாட்டின் பிற மாநிலங்களிலும் ஏற்பட்டு அங்கும் போராட்டம் நடைபெற்றது. குறிப்பாக, மும்பையின் போராட்டம் டெல்லிக்கு அடுத்தநிலையில் தேசியக் கவனம் பெற்றது.
மும்பை போராட்டம்
போராட்டத்திற்கு ஆதரவாக அனுமதியின்றி வீதிகளில் இறங்கிப் போராடியதற்காக, மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி, நடிகர் இம்ரான் கான் உள்ளிட்டோர் கைதாகினர். இவர்களுடன் சிபிஎம் கட்சியின் தொண்டர்கள் உட்பட சுமார் 4,00 பேர் மும்பையின் பல்வேறு இடங்களில் தடுத்து வைக்கப்பட்டனர்.
மும்பையின் ஆகஸ்ட் கிராந்தி மைதானம், ஹுதாத்மா சௌக் மற்றும் பிற இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான 'வஞ்சித் பகுஜன் அகாடி' அமைப்பின் பல செயற்பாட்டாளர்கள் ஹுதாத்மா சவுக்கில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துஷார் காந்தி தலைமையிலான ’ஹம் பாரத் கே லோக்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) செயற்பாட்டாளர்கள் உட்பட
நூற்றுக்கணக்கானோர் ஆகஸ்ட் கிராந்தி மைதானத்தில் அனுமதியின்றி ஒன்றுகூடினர்.
முதலில் யூடியூபர் துருவ் ரதி அவரது குருகிராம் இல்லத்தில் இருந்து தடுத்து வைக்கப்பட்டார்; பின்னர், சிஜேபி-யின் முக்கியத் தலைவர்களான அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் விமானத்திலிருந்தே காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டனர். மாலை நேரத்திற்குள், உட்பட சுமார் 4,000 பேர் தடுத்து வைக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதான சிஜேபி தலைவர்கள்
போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், யூடியூபர் துருவ் ரதி மற்றும் சிஜேபி தலைவி ரத்னா சிங் ஆகியோர் அவர்களது குருகிராம் இல்லத்தில் இருந்து தடுத்து வைக்கப்பட்டனர். சனிக்கிழமை காலை சுமார் 9:45 மணியளவில் சிஜேபி ஒருங்கிணைப்பாளர்களான அபிஜித் திப்கே, சௌரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் தடுப்புக் காவலில் சிக்கினர்.
இந்த மூவரும் மும்பையிலிருந்து டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கினர். இவர்களை உடனேயே, ஓடுபாதையில் நின்றிருந்த விமானத்திற்குள் நுழைந்த காவல் குழுவினர் அவர்களைக் கைது செய்தனர்.
மாலைக்குள் மற்ற அனைத்துச் செயல்பாட்டாளர்களும் விடுவிக்கப்பட்டனர், ஆனால் திப்கே, சவுரவ் மற்றும் ரங்கா ஆகியோர் விடுவிக்கப்படவில்லை. டெல்லியில் எங்கு வைக்கப்பட்டிருக்கிறார்கள் இவர்கள் என யாருக்குமே தெரியவில்லை.
இந்த மூவரையும் இன்று டெல்லி நீதிமன்ற நீதிபதியின் முன் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜந்தர் மந்தரிலும் நேற்றைப் போல் போராட்டத்தை தடுக்க, ஜந்தர் மந்தர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிரிவு 163 அமல்படுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.