எல்லையில் படைகளை கணிசமாக குறைத்தது சீனா: பாதுகாப்பு அமைச்சகம்

எல்லையில் படைகளை கணிசமாக குறைத்தது சீனா: பாதுகாப்பு அமைச்சகம்
Updated on
1 min read

புது டெல்லி: இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LAC) பகுதியில் சீனப் படைகளின் குவிப்பு கடந்த ஆண்டு முதல் குறைந்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் காரணமாக இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் வெளியான அறிக்கையில், ‘இந்தியாவின் வடக்கு எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தின் (PLA) படைகள் அதிகளவில் நிறுத்தப்பட்டிருந்த நிலையில், 2025-ம் ஆண்டில் அவற்றில் கணிசமாக குறைக்கப்பட்டது. எல்லைப் பகுதியில் சீனா 10 ஒருங்கிணைந்த படைப் பிரிவுகளை நிறுத்தியிருந்தது. அதேவேளையில், எல்லைக்கு அப்பால் உள்ள வழக்கமான பயிற்சிப் பகுதிகளில் மேலும் 10 படைப் பிரிவுகள் நிலைநிறுத்தப்பட்டிருந்தன

இதன் அடிப்படையில் கணக்கிட்டால், கடந்த ஆண்டு எல்லைப் பகுதியில் சுமார் 40,000 முதல் 50,000 வரையிலான சீனப் படைகளும், அதே எண்ணிக்கையிலான படைகள் குறிப்பிட்ட பயிற்சிப் பகுதிகளிலும் இருந்தன. அக்டோபர் 2024-ல் அனைத்து மோதல் பகுதிகளிலிருந்தும் படைகளை விலக்கிக்கொள்வது குறித்த உடன்பாடு எட்டப்படுவதற்கு முன்பு, லடாக் பகுதியில் மட்டும் 60,000-க்கும் மேற்பட்ட சீனப் படைகள் இருந்ததாக மதிப்பிடப்பட்டிருந்தது.

அரசியல், தூதரக மற்றும் ராணுவ நிலைகளில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நடைபெற்ற இருதரப்பு பேச்சு வார்த்தைகள் காரணமாக சீனா தனது படைகளை 2025ல் கணிசமாக குறைத்துக்கொண்டது. எல்லைப் பகுதிகளில் இந்திய ராணுவத்தின் படைக் குவிப்பு வலுவாக உள்ளது, எந்தவொரு அவசரச் சூழலையும் எதிர்கொள்ள நமது படைகள் தயாராக உள்ளன’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லையில் படைகளை கணிசமாக குறைத்தது சீனா: பாதுகாப்பு அமைச்சகம்
மும்பையில் விநாயகர் சேவையில் முஸ்லிம் குடும்பம்: மதநல்லிணக்கத்துக்கு முன்னுதாரணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in