மும்பையில் விநாயகர் சேவையில் முஸ்லிம் குடும்பம்: மதநல்லிணக்கத்துக்கு முன்னுதாரணம்

மும்பையில் விநாயகர் சேவையில் முஸ்லிம் குடும்பம்: மதநல்லிணக்கத்துக்கு முன்னுதாரணம்
Updated on
2 min read

புதுடெல்லி: மும்பையில் விநாயகர் சேவையில் ஒரு முஸ்லிம் குடும்பம் கடந்த 16 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இது, இந்து-முஸ்லிம் ஒற்றுமை மற்றும் மதநல்லிணக்கத்துக்கு முன் உதாரணமாகப் பார்க்கப்படுகிறது.

மும்பையில் பி.பி. மார்க் பகுதியில் விநாயகர் சதூர்த்தியை வருடந்தோறும் கொண்டாட ராஜா கணேஷ் மண்டல் எனும் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பில், மதத்தை விட மனிதாபிமானத்திற்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.

இந்த பி.பி மார்க்கில் ஒரு முஸ்லிம் குடும்பம் பல ஆண்டுகளாக விநாயகரின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. இந்த மண்டலின் தலைவராக அப்பாஸ் கான் எனும் ஒரு முஸ்லிம் தேர்வாகி உள்ளார்.

இவர், கடந்த 16 ஆண்டுகளாக கணேஷ் உத்சவத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறார். இதை அவர் மிகுந்த பக்தியுடன் தனது பொறுப்புகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார். மும்பையின் கணேஷ் உத்சவம் என்பது வெறும் நம்பிக்கையைச் சார்ந்த திருவிழா மட்டும் அன்றி அது, சமூக ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தின் அடையாளம் என்பதை இது காட்டுகிறது.

கடந்த 2009ல் ராஜா கணேஷ் மண்டலின் பொறுப்பை ஏற்றது முதல், விநாயகர் விழாவை, வெறும் மத நிகழ்வாக மட்டும் பார்க்காமல், சமூக ஒற்றுமைக்கான ஒரு தளமாக மாற்ற அப்பாஸ் கான் பாடுபட்டு வருகிறார்.

பி.பி மார்க் மண்டலின் நிகழ்ச்சிகளில் அனைத்து மதங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்த மக்களும் பங்கேற்கின்றனர். கணேஷ் உத்சவத்தின் போது, மண்டலின் சேவைகள், அலங்காரப் பணிகள் உள்ளிட்ட பலவற்றிலும் பல்வேறு தரப்பட்ட மக்களும் தங்கள் பங்களிப்பை வழங்குகின்றனர்.

அப்பாஸ் கானின் மனைவி ஹசீனா கானும் மண்டலின் பணிகளில் தீவிரமாகப் பங்காற்றி வருகிறார். கணேஷ் உத்சவத்திற்கான ஆயத்தப் பணிகள் முதல் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் ஏற்பாடுகள் வரை அனைத்திலும் அவர் தனது கணவருக்கு முழு ஆதரவை அளிக்கிறார்.

இக்குடும்பத்தின் அடுத்த தலைமுறையினரும் இந்த மரபைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர். அப்பாஸ் கானின் மகன் சாஹில் கானும் மண்டலின் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு, கணேஷ் உத்சவத்தை ஒருங்கிணைப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

இதனால், பி.பி. மார்க் ராஜா கணேஷ் மண்டல் என்பது வெறும் கணேஷ் மண்டல் மட்டுமல்ல, அது இந்து-முஸ்லிம் சகோதரத்துவத்தின் ஒரு வாழ்வியல் சான்று என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். ஏனெனில், முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இந்த மண்டலில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.

மேலும், இந்து சமூகத்தைச் சேர்ந்த ஏராளமான தன்னார்வலர்களுடன் இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்தத் தோளோடு தோள் நின்று முஸ்லிம்கள் பலரும் பணியாற்றுகின்றனர்.

நாட்டில் மதம் மற்றும் சமூகம் சார்ந்த விவகாரங்களைச் சுற்றி அரசியல் சூழல் நிலவுகிறது. இத்தகைய சூழலில், பி.பி. மார்க் ராஜா கணேஷ் மண்டல் வழங்கும் இந்தச் செய்திக்கு ஒரு சிறப்பான முக்கியத்துவம் உள்ளது.

மதங்கள் வேறுபட்டிருந்தாலும் இதயங்களும் உணர்வுகளும் மும்பையின் பி.பி மார்க்கில் ஒன்றுபட்டிருக்கிறது. ஒவ்வொரு வருடமும் கணேஷ் உத்சவத்தின் போது வெளிப்படும் இந்து-முஸ்லிம் ஒற்றுமை, இன்றைய சமூகத்திற்கு ஒரு உத்வேகமாக மாறியுள்ளது.

மும்பையில் விநாயகர் சேவையில் முஸ்லிம் குடும்பம்: மதநல்லிணக்கத்துக்கு முன்னுதாரணம்
விநாயகப் பெருமான் அருளால் அனைத்து நற்செயல்களும் இனிதே நிறைவேற முதல்வர் விஜய் வாழ்த்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in