

புதுடெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் சீன ராணுவம் 60 கி.மீ. தூரம் இந்தியப் பகுதிக்குள் ஊடுருவியதாக வெளியான தகவல்களை, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதாவது: சீன ராணுவம் நமது கிராமத்தைக் கைப்பற்றிவிட்டதாகவும், குறிப்பாக 60 கி.மீ. தூரம் இந்தியாவுக்குள் ஊடுருவியதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்படி எதுவும் நடக்கவில்லை. இது பொய்யான தகவல். வங்கதேசம் உள்ளிட்ட வேறு இடங்களில் எடுக்கப்பட்ட தொடர்பில்லாத புகைப்படங்களைப் பயன்படுத்தி, சீன ராணுவம் அருணாச்சலப் பிரதேசத்துக்குள் ஊடுருவியுள்ளதாகக் கூறுவதும் சரியல்ல.
இதுபோன்ற தவறான தகவல்கள் அங்கு பணியாற்றும் நமது ராணுவ வீரர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் மன உறுதியைக் குலைக்கும். மேலும், நாட்டில் குழப்பத்தையும் ஏற்படுத்தும். அருணாச்சலப் பிரதேசத்தின் எல்லையோர கிராமங்களில் வசிக்கும் மக்கள் எழுப்பியுள்ள கவலைகள் நியாயமானவை.
அதேநேரம், சீனப் படைகள் இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக தவறான தகவல்களைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும். எல்லை வரையறுக்கப்படாததால், குறிப்பிட்ட சில நிலப்பகுதிகளுக்கு சீனா உரிமை கோருகிறது. எல்லைப் பகுதியில் இந்தியா பாதுகாப்பு ஏற்பாடுகளை வலுப்படுத்தியுள்ளது. ராணுவம் மற்றும் இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை ஆகியவை அப்பகுதியில் ரோந்துப் பணியை அதிகரித்துள்ளன.