

புதுடெல்லி: நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு நடைமுறையை மேம்படுத்தக் கோரி அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிடும்போது, “நீட் மோசடியைத் தடுக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வினாத்தாள் கசிவதை தடுப்பதற்கு புதிய வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
புதிய வழிமுறைப்படி 4 விதமான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அதில் தேசிய தேர்வுகள் முகமையின் இயக்குநரால் இரண்டு வினாத் தாள்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் அவை அச்சிடுவதற்காக இரு வேறு அச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த நடவடிக்கை முழுவதும் வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்படும்.
மேலும் தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் ஆயுதம் ஏந்திய துணை ராணுவ படை பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்படும்” என்றார். ஆனால் அந்தப் பதிலில் திருப்தி அடையாத நீதிபதிகள், ராதாகிருஷ்ணன் குழு அளித்துள்ள பரிந்துரைகளை செயல்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து மத்திய கல்வி அமைச்சகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை 3 வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.