

புவனேஸ்வர்: ஒடிசாவில் சுமார் 3 மாதங்களுக்கு பிறகு அங்கன்வாடிக்கு திரும்பிய குழந்தைகள், தலித் சமையல் உதவியாளர் தயாரித்த உணவை உண்டனர். இதன் மூலம் சாதிய பாகுபாட்டுக்கு பெற்றோர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.
முன்னதாக, சம்மந்தப்பட்ட அங்கன்வாடி மையத்தில் சமையலராகப் பணியமர்த்தப்பட்ட தலித் பெண்ணுக்கு எதிராக கிராம மக்களின் சமூகப் புறக்கணிப்பு தேசிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் அங்குள்ள நுவாகோன் கிராமத்தில் நடந்தது.
தலித் சமூகத்தை சேர்ந்த 21 வயது பட்டதாரிப் பெண் சர்மிஸ்தா சேத்தி. அரசு வேலை பெற்று, உள்ளூரான நுவாகோன் கிராம அங்கன்வாடி மையத்தில் சமையல் உதவியாளர் பணிக்கு தேர்வானார். ஆனால், அவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவர் சமைக்கும் உணவை தங்கள் குழந்தைகள் உண்ணக் கூடாது எனக்கூறி மற்ற பிரிவினர் குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்தனர். மேலும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு அரசால் வழங்கப்படும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் ஏற்க மறுத்தனர்.
சர்மிஸ்தா சேத்தியின் பணி நியமனத்தை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி முதல் நுவாகோன் கிராம அங்கன்வாடி மையம் செயல்படாமல் முடங்கியது. இந்த விவகாரம் தேசிய அளவில் பேசுபொருளானது. மேலும், இதை முன்வைத்து பணியிடத்தில் அரங்கேறும் சாதிய ரீதியான பாகுபாடு குறித்து மாநிலங்களையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியிருந்தார்.
இந்நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு காண மாவட்ட அரசு அதிகாரிகள் அமைதி குழு ஒன்றை அமைத்தனர். மேலும், தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாத கிராம மக்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
இதையடுத்து நுவாகோன் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் பதிவு செய்த 20 குழந்தைகளில் 16 பேர் திங்கட்கிழமை அன்று மீண்டும் அங்கன்வாடி மையத்துக்கு வருகை தந்தனர். அவர்களை கேந்திரபாரா குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி தீபாலி மிஸ்ரா மற்றும் ராஜ்நகர் எம்எல்ஏ த்ரூபா சரண் சாஹு வரவேற்றனர். இதில் வருகை தராத நான்கு பேருக்கும் உடல்நிலை பாதிப்பு என தெரிவிக்கப்பட்டது.
“மூன்று மாதங்களுக்கு பின்னர் அங்கன்வாடிக்கு வருகை தந்த குழந்தைகளுக்கு நான் தயாரித்த ராகி லட்டு, அரிசி சாதம் மற்றும் டால்மாவை பரிமாறினேன். அதை அவர்கள் ருசித்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அவர்கள் பொம்மைகளை கொண்டு விளையாடினர். இதன் மூலம் மீண்டும் அங்கன்வாடி மையம் அதை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இதோடு இனி இந்த கிராமத்தில் சாதிய ரீதியான புறக்கணிப்புகள் இருக்காது என நம்புகிறேன்” என சர்மிஸ்தா சேத்தி தெரிவித்தார்.