

நாசிக்: மகாராஷ்டிராவின் நாசிக் நகரில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பெண் ஊழியர்களுக்கு மூத்த அதிகாரிகள் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
குறிப்பாக மூத்த அதிகாரியாக பணியாற்றிய நீடா கான், பெண் ஊழியர்களை மத மாற்றத்துக்கு தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட மூத்த அதிகாரிகளுக்கு அவர் உடந்தையாக இருந்ததாகவும் கூறப்பட்டது.
இது தொடர்பாக நாசிக் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீடா கான் உள்ளிட்ட பலரை கைது செய்தனர். தற்போது நீடா கான் 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதை முன்னிறுத்தி நாசிக் விசாரணை நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரினார்.
இந்த மனுவை கடந்த 6ம் தேதி விசாரித்த நீதிபதி கே.ஜி.ஜோஷி, நீடா கானுக்கு ஜாமீன் வழங்கினார். ஜாமீன் உத்தரவில் நீதிபதி கே.ஜி.ஜோஷி கூறிய கருத்துகள் தற்போது வெளியாகி உள்ளன. “பகவான் கிருஷ்ணர் சிறையில் பிறந்தார். சிறையில் குழந்தையை பெற்றெடுப்பது மிகவும் வேதனையானது. நீடா கானின் கருவில் இருக்கும் குழந்தையின் நலனை கருத்தில் கொண்டே அவருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது” என்று நீதிபதி கே.ஜி.ஜோஷி தெரிவித்துள்ளார்.