

புதுடெல்லி: மேற்கு வங்கத்தில் வன்முறை இல்லாத தேர்தலை உறுதி செய்வோம் என தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 23 (நாளை) மற்றும் 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மே 4 அன்று நடைபெற உள்ளது. இந்நிலையில், தேர்தலை மேற்பார்வையிடும் அதிகாரிகளுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நேற்று ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
அதில் கூறியிருப்பதாவது: மேற்கு வங்கத்தில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் எந்த ஒரு முயற்சியையும் விட்டுவைக்காது. முறைகேடுகளைக் கட்டுப்படுத்துவதற்கும் வாக்காளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அச்சம், வன்முறை, மிரட்டல் மற்றும் தூண்டுதல்கள் இல்லாத தேர்தலை நடத்த இந்தியத் தேர்தல் ஆணையம் உறுதி பூண்டுள்ளது. எனவே, எந்தவொரு தேர்தல் முறைகேடுகளுக்கும் இடம் தரக்கூடாது.
இந்த விவகாரத்தில் ‘பூஜ்ஜிய சகிப்புத் தன்மை’ அணுகு முறையை கடை பிடிக்க வேண்டும். அரசு ஊழியர்கள் யாரும் தேர்தல் செயல்பாட்டில் தலையிடக்கூடாது. மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள் அல்லது தன்னாட்சி அமைப்புகளின் எந்தவொரு ஊழியரும் தேர்தல் செயல்பாட்டில் எந்த வகையிலும் செல்வாக்கு செலுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு வாக்காளரும் தங்களது வாக்கை அச்சமின்றி செலுத்த வேண்டும். தேர்தல் திருவிழா என்பது மேற்கு வங்கத்தின் பெருமை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.