

புதுடெல்லி: எஸ்ஐஆர் விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை இடை நீக்கம் செய்ய உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரிய மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘‘ஞானேஷ் குமாரை இடைநீக்கம் செய்யும் விவகாரத்தில் ஒரு தரப்பு கோரிக்கையை வைத்தோ அல்லது செய்தித்தாள் செய்திகளை அடிப்படையாகக் கொண்டோ இடைக்கால உத்தரவை பிறப்பிக்க முடியாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம், சம்பந்தப்பட்ட தரப்பினரின் பதிலைப் பெற வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் சட்டத்திற்கு உட்பட்டே எடுக்கப்பட்டதாக நீதிமன்றம் கருதுகிறது. சட்டத்தை மீறி முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தால், அவற்றை ரத்து செய்வது உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் எடுக்கும்’’ என்று தெரிவித்தனர். இந்திய தேர்தல் ஆணையம், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.