2029-ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை: ப.சிதம்பரம்

ஜேபிசி தலைவர் பி.பி.சவுத்ரியின் கருத்துக்கு மறுப்பு
2029-ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை: ப.சிதம்பரம்
Updated on
1 min read

புதுடெல்லி: 2029 பொதுத் தேர்தலின்போது ஒரே நாடு ஒரே தேர்தலை நடத்துவது சாத்தியமில்லாதது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தொடர்பான மசோதா, நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வில் உள்ளது.

இந்நிலையில், அரசியலமைப்பில் திருத்தம் செய்யப்பட்டு மாநில அரசுகளின் ஆதரவு கிடைத்தால் 2029-ல் மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் என்று கூட்டுக்குழுவின் தலைவர் பி.பி.சவுத்ரி நேற்று (ஆக.24) தெரிவித்திருந்தார்.

மேலும், ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது காலத்தின் கட்டாயம் என்றும், இது நாட்டின் மாபெரும் நலனுக்கானது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழுவிடம் எனது கருத்துகளை முன்வைக்கக் கிடைத்த வாய்ப்புக்கு நன்றி.

கூட்டுக்குழுவிடம் நான் அளித்த சான்றுகளை வெளிப்படுத்த எனக்கு அனுமதி இல்லை. இருப்பினும், கூட்டாட்சித் தத்துவத்தைக் கொண்ட நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படைக் கொள்கைகளையும், அரசியலமைப்பின் அடிப்படை அம்சங்களையும் இந்த மசோதா மீறுகிறது என்பதே எனது விளக்கத்தின் முக்கிய சாராம்சம்.

2029-ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியம் என்று கூட்டுக்குழுவின் தலைவர் கூறியதாக வெளியான அறிக்கையை நான் படித்தேன். அவரது கருத்து தவறானது என்றும், அது மசோதாவின் வாசகங்களுக்கு முரணானது என்றும் நான் கருதுகிறேன்.

ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் கூட (அதற்கான வாய்ப்பு மிகக் குறைவு), மசோதாவின் கீழ் குறிப்பிடப்படும் 'நடைமுறைப்படுத்தப்படும் தேதி' என்பது பொதுத் தேர்தலுக்குப் பிந்தைய ஒரு தேதியாக மட்டுமே இருக்க முடியும்.

அடுத்த பொதுத் தேர்தல் 2029-ல் நடைபெறும். எனவே, 2029-ல் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை; இது ஒரு நல்ல விஷயம்.

கூட்டாட்சித் தத்துவத்தைக் கொண்ட நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு பெரும் அரசியலமைப்பு முரண்பாடாகத் திகழும் இந்த மசோதாவுக்கு எதிராக, காங்கிரஸும் பிற எதிர்க்கட்சிகளும் நாடு தழுவிய பிரச்சாரத்தை மேற்கொள்ளும்” என தெரிவித்துள்ளார்.

2029-ல் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ சாத்தியமில்லை: ப.சிதம்பரம்
தருண் தேஜ்பால் 2 வாரங்களுக்குள் சரணடைய உச்ச நீதிமன்றம் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in