

ராய்ப்பூர்: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்தத்தை உடனே அமல்படுத்த சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தீர்மானம் தாக்கல் செய்தார்.
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் தோற்கடிக்கப்பட்டது. இதையடுத்து பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனே அமல்படுத்தக் கோரி தீர்மானம் நிறைவேற்ற சத்தீஸ்கரில் ஒரு நாள் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. இதில் தீர்மானத்தை தாக்கல் செய்து முதல்வர் விஷ்ணு தியோ சாய் பேசுகையில், ‘‘தொகுதி மறுவரையறையை தொடர்ந்து, பெண்களின் கவுரவம், வளர்ச்சி, மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளில் 3-ல் ஒரு பங்கு இடஒதுக்கீடு ஆகியவற்றை உடனே அமல்படுத்த வேண்டும்’’ என்றார்.
இந்த தீர்மானம் தொடர்பாக சத்தீஸ்கர் சட்டப்பேரவையில் 4 மணி நேரம் விவாதம் நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் சரண் தாஸ் மகந்த், மக்களவையில் தற்போதுள்ள எம்.பி.க்களின் எண்ணிக்கையிலேயே பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்க வேண்டுகோள் விடுத்து மற்றொரு தீர்மானத்தை தாக்கல் செய்தார்.
இதை அனுமதிக்க முடியாது என சபாநாயகர் ரமண் சிங் கூறினார். இதேபோல் மத்திய பிரதேச சட்டப்பேரவையில் கடந்த திங்கள் கிழமை, பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை உடனே அமல்படுத்த கோரி தீர்மானம் நிறைவேற்றியது.