

புதுடெல்லி: உத்தராகண்டில் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய 4 புனித கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்வதை ‘சார் தாம்’ யாத்திரை என்கின்றனர்.
இந்த ஆண்டுக்கான யாத்திரை ஏப்ரல் 19-ம் தேதி அக் ஷய திருதியை அன்று தொடங்குகிறது. இந்நிலையில், பத்ரிநாத், கேதார்நாத் கோயில் குழு (பிகேடிசி) பட்ஜெட் கூட்டம் நேற்று டேராடூனில் நடைபெற்றது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன் விவரம் வருமாறு: உத்தராகண்டின் 4 புனிதத் தலங்களில் பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய 2 கோயில்களில் மட்டும் இந்துக்கள் அல்லாதோர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. இங்கு இந்துக்கள் அல்லாதோரும் வியாபாரம் செய்கின்றனர். இந்துக்கள் அல்லாத ஏராளமானோர் சுற்றுலாவும் வருகின்றனர். அவர்கள் வந்து செல்வதால் கோயில்களின் புனிதம் பாதிப்பதாகப் புகார்கள் உள்ளன. எனவே, இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், கோயில்களில் நிர்ணயிக்கப்பட்ட தூரத்துக்குள் மொபைல் போன் தடை செய்யப்பட்டுள்ளது. யமுனோத்ரி, கங்கோத்ரி கோயில்களின் நடை அக் ஷய திருதியை நாளான ஏப்ரல் 19ம் தேதி திறக்கப்படுகிறது. கேதார்நாத் கோயில் நடை ஏப்ரல் 22ம் தேதியும் பத்ரிநாத் கோயில் நடை ஏப்ரல் 23ம் தேதியும் திறக்கப்படும்.