

அமராவதி: சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் கடந்த 29-ம் தேதி மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், கொத்தப்பட்டினம் பகுதியில் ஆழ்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, முரசு புயலின் பலத்த சூறாவளிக் காற்றால் இவர்களது படகு எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்தது. 9 மீனவர்களும் கடல் சுழலில் அடித்துச் செல்லப்பட்டனர்.
இவர்களில் 5 பேரின் உடல்கள் கொத்தப்பட்டினம் கடற்கரையில் ஒதுங்கின. இதையடுத்து, ஆந்திரக் கடலோரக் காவல் படையினரும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளும் மீதமுள்ள 4 பேரைத் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தத் தகவலை அறிந்த முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், துணை முதல்வர் பவன் கல்யாணும், உள்துறை அமைச்சர் அனிதாவை உடனடியாகச் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
தேடும் பணியையும் முடுக்கிவிட்டனர். இதில், 2 பேரின் உடல்கள் நேற்று கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. மீதமுள்ள 2 பேரைத் தேடும்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடுவும், துணைமுதல்வர் பவன் கல்யாணும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.