

பிரதமர் மோடி
கொல்கத்தா: ஐஐடி காரக்பூர் பவள விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ‘சவால்களுக்கே சவால் விடுப்பது என் வழக்கம்’ எனக் கூறினார்.
இந்தியாவின் முதல் இந்தியத் தொழில்நுட்பக் கழகம் (ஐஐடி) மேற்கு வங்கத்தின் காரக்பூர் நகரில் கடந்த 1951-ம் ஆண்டு நிறுவப்பட்டது. இது நாட்டின் மிகப்பெரிய ஐஐடி வளாகமாக விளங்குகிறது. இந்நிலையில், ஐஐடி காரக்பூர் தொடங்கப்பட்டு 75-வது ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதன் பவள விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டார். பின்னர் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
ஒரு நாடு தனது சிந்தனையின் வரம்புகளை உடைக்கும்போதுதான் அதன் ஆற்றல்களைக் கண்டறிகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா இதை நிரூபித்துள்ளது. சிரமங்களை எதிர்கொள்வதில் மக்கள் பெரும்பாலும் தங்களுக்குத் தாங்களே வரம்புகளை விதித்துக்கொள்கிறார்கள். ஆனால் நான் சவால்களை எதிர்கொள்வதையும், அந்தச் சவால்களுக்கே சவால் விடுப்பதையும் வழக்கமாகக் கொண்டவன்.
வறுமை குறித்த நிலவும் மனநிலையை மாற்றுவதற்கும், மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கும் எனது அரசு கடந்த 12 ஆண்டுகளாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ‘தேசம் முதலில்’ என்ற தாரக மந்திரத்தை மாணவர்களாகிய நீங்கள் பின்பற்ற வேண்டும். இது உங்களுக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்குவதோடு, நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும். அடுத்த 20 ஆண்டுகளில் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்குப் பாடுபடுவோம் என ஐஐடி காரக்பூரின் மாணவர்களும் பேராசிரியர்களும் உறுதிமொழி ஏற்க வேண்டும்.
முக்கிய பங்களிப்பு
சுதந்திரம் பெற்ற உடனேயே நிறுவப்பட்ட ஐஐடி காரக்பூர், இந்தியாவின் மாற்றத்தில் ஒரு முக்கியப் பங்கை ஆற்றியுள்ளது. அந்த நிறுவனம் தனது பயணத்தைத் தொடங்கியபோது, இந்தியா சுதந்திரம் அடைந்து சில நாட்களே ஆகியிருந்தன. அப்போது நாட்டின் தொழில் துறைகளையும் உள்கட்டமைப்பையும் மேம்படுத்த பொறியாளர்கள் தேவைப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின் பட்டதாரிகள், இந்தியாவின் விண்வெளி மற்றும் அணுசக்தித் திட்டங்கள் உள்ளிட்ட அறிவியல் திறன்களை வலுப்படுத்துவதற்குப் பங்களித்தனர்.
சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான சிறை முகாம் இருந்த இடத்தில்தான் ஐஐடி காரக்பூர் நிறுவப்பட்டது. இங்கே அடைக்கப்பட்டிருந்த சுதந்திரப் போராட்ட வீரர்கள் நாள் முழுவதும் எதைப் பற்றிப் பேசியிருப்பார்கள்? அவர்கள் என்ன சிந்தித்திருப்பார்கள்? என்பதை கற்பனை செய்து பாருங்கள். அவர்களின் எண்ணங்களும் செயல்பாடுகளும் தலைமுறை தலைமுறையாகத் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
கடந்த 75 ஆண்டுகளில் இந்தியா, மாட்டு வண்டிகளிலிருந்து புல்லட் ரயில்களுக்கும், தபால் கடிதங்களிலிருந்து சமூக ஊடகச் செய்திகளுக்கும் மிகப்பெரிய மாற்றத்துக்கு உள்ளாகியுள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.