

புதுடெல்லி: வர இருக்கும் சட்டப்பேரவை தேர்தல்களுக்காக சில புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல்கள் சுதந்திரமாக, நியாயமாக, வெளிப்படையாக நடைபெறுவதை மத்திய தேர்தல் பார்வையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, மத்திய பார்வையாளர்களுக்கான விளக்கக் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கி இன்று நிறைவடைந்தது.
மூன்று கட்டங்களாக நடைபெற்ற இந்த விளக்கக் கூட்டத்தில், 714 பொதுப் பார்வையாளர்கள், 233 காவல் துறை பார்வையாளர்கள், 497 செலவினப் பார்வையாளர்கள் உட்பட 1,444 அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, தேர்தல் நடத்தை, செலவினம், தகவல் தொழில்நுட்பம், ஊடகம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்வீர் சிங் சந்து, டாக்டர் விவேக் ஜோஷி ஆகியோர் இதில் கலந்து கொண்டு விளக்கங்களை அளித்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஞானேஷ் குமார், ‘‘இந்தியாவில் தேர்தல்கள் சட்டத்தின்படியும், தேர்தல் ஆணையத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் அறிவுறுத்தல்களின்படியும் நடத்தப்படுகின்றன. இதில் இருந்து விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை.
சட்டத்தையும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்களையும் தேர்தல் பார்வையாளர்கள் பின்பற்ற வேண்டும். கடந்த ஓராண்டில் தேர்தல் ஆணையத்தால் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டன. வர இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்காக சில புதிய முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
சுதந்திரமான, நியாயமான, வெளிப்படையான முறையில் தேர்தல்கள் நடப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்’’ என கேட்டுக்கொண்டார்.