பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு ‘ஷஷாத் பட்டி நெட்வொர்க்’ பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பு

ஷஷாத் பட்டி |கோப்புப் படம்

ஷஷாத் பட்டி |கோப்புப் படம்

Updated on
1 min read

புதுடெல்லி: பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆதரவு பெற்ற ‘ஷஷாத் பட்டி நெட்வொர்க்’ அமைப்பை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் பயங்கரவாத அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானில் குற்ற கும்பல் தலைவனாக இருந்த ஷஷாத் பட்டி, அந்நாட்டின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்க ‘ஷஷாத் பட்டி நெட்வொர்க்’ திட்டமிட்டதை அறிந்து, அந்த அமைப்பைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர். ‘ஷஷாத் பட்டி நெட்வொர்க்’ அமைப்புக்கு எதிராக இந்தியாவில் 80க்கும் மேற்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, ‘ஷஷாத் பட்டி நெட்வொர்க்’ அமைப்பு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், இதற்கான அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்: ‘ஷஷாத் பட்டி நெட்வொர்க்’ அமைப்பு இளைஞர்களை தீவிரவாத பாதையில் ஈர்ப்பதிலும், அவர்களை தேச விரோத செயல்களில் ஈடுபட தூண்டுவதிலும், தடை செய்யப்பட்ட பிற அமைப்புகளுடன் இணைந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதிலும் தீவிரம் காட்டி வருகிறது.

பொது அமைதியைக் குலைக்கும் வன்முறைச் செயல்கள் மூலமாகவும், ஆத்திரமூட்டும் செய்திகளை பரப்ப பல்வேறு டிஜிட்டல் தகவல் தொடர்பு தளங்களை பயன்படுத்துவதன் மூலமாகவும் பயங்கரவாதத்தை ஊக்குவித்து வருகிறது. இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இந்த வலையமைப்பு பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன், இந்தியாவில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களிலும் ஈடுபட்டுள்ளது.

இந்த அமைப்பு நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களை தீவிரவாதத்தின் பக்கம் ஈர்த்து தங்கள் குழுவில் இணைத்துள்ளது. டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த அமைப்புக்கு எதிராக வழக்குகள் உள்ளன.

இந்த அமைப்புக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வெடிபொருள் சட்டம், தகவல் தொழில்நுட்ப சட்டம், ஆயுதச் சட்டம், உபா, அதிகாரப்பூர்வ ரகசிய சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் உள்ளன.

‘ஷஷாத் பட்டி நெட்வொர்க்’ அமைப்பின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அனைத்து மாநில மற்றும் மத்திய அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<div class="paragraphs"><p>ஷஷாத் பட்டி |கோப்புப் படம்</p></div>
இந்திய கடற்படை கப்பல் மீது மோதிய பாகிஸ்தான் கப்பல் - இந்தியா கடும் கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in