

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பொது பட்ஜெட் தாக்கல் செய்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், காஞ்சிபுரம் பட்டு சேலை உடுத்தி இருந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஒன்பதாவது முறையாக பொது பட்ஜெட் தாக்கல் செய்தார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன். அவர் தனது ஒவ்வொரு பட்ஜெட் தாக்கலின் போதும் இந்திய ஜவுளிக் கலாச்சாரத்தை வெளிப்படுத்தி வருகிறார்.
அவர் பொது பட்ஜெட் தாக்கல் தினத்தில் உடுத்தும் சேலை பல்வேறு செய்திகளை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் அவர் நேற்று காஞ்சிபுரம் பட்டு சேலை அணிந்திருந்தார். தமிழ்நாட்டில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் காஞ்சி பட்டு சேலையை தேர்வு செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இந்த சேலை மெஜந்தா-மெரூன் நிறத்தில் கட்டங்களுடன் இருந்தது. கண்ணைக் கவரும் பார்டர் மற்றும் நுணுக்கமான தங்க நிற ஜரிகை வேலைப்பாடுகள் அதில் இடம்பெற்றிருந்தன. இந்த சேலை அவரது சொந்த மாநிலமான தமிழ்நாட்டின் செழுமையான நெசவு பாரம்பரியத்தை பிரதிபலித்தது. இந்திய கைத்தறி தொழிலின் பெருமையையும் பறைசாற்றியது. புடவைக்கு பொருந்தும் வகையில் ஒரு வெளிர் மஞ்சள் நிற ரவிக்கை, அடர்நிற சால்வையும் நிர்மலா அணிந்திருந்தார்.
பட்ஜெட் தாக்கலின் போது பொதுவாக எளிமையான கைத்தறிப் புடவையும், குறைந்தபட்ச நகைகளும் அணிவதே அமைச்சர் நிர்மலாவின் வழக்கமாக உள்ளது. இவரது உடைகளில், பகட்டான நவீன வெளிப்பாடுகள் இருப்பதில்லை. எனினும் அவரது எளிமையான உடைகளே கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளன.
இந்தியாவின் கைத்தறி மற்றும் பாரம்பரியத் துணிகள், சிறு உற்பத்தியாளர்கள், கைவினைஞர்கள் மற்றும் உள்ளூர் தொழில்களை இந்த உடைகள் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அடித்தட்டு மக்களின் உழைப்பில் வேரூன்றிய ஒரு பொருளாதாரத்தைப் பிரதிபலிக்கின்றன.
பட்ஜெட் லேப்டாப்புடன் இருக்கும் நிர்மலா சீதாராமன். முதல் வரிசை (இடமிருந்து வலம்) 2019, 2020, 2021.
நடு வரிசை (இடமிருந்து வலம்) 2022, 2023, 2024 (இடைக்கால பட்ஜெட்).
கடைசி வரிசை (இடமிருந்து வலம்) 2024 (பொது பட்ஜெட்), 2025, 2026.
பல ஆண்டுகளாக, அவரது பட்ஜெட் தினப் புடவைகள் எளிமையான, ஆர்ப்பாட்டமற்ற வடிவமைப்புகளாகவே உள்ளன. சிக்கலான நெசவுகள் மற்றும் வடிவங்களைக் கொண்டவையாகவும் அவை இருந்துள்ளன. கடந்த 2025 பட்ஜெட் தாக்கலின்போது அமைச்சர் நிர்மலா, பிஹாரின் புகழ்பெற்ற மதுபனி வகை சேலை அணிந்திருந்தார். கடந்த வருடம் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் இது என்பது கவனிக்கத்தக்கது.
அமைச்சர் நிர்மலா தனது முதல்முறை பட்ஜெட் தாக்கலின் போது தொடங்கிய 'பஹி-கட்டா'வையும் நேற்று கொண்டு வந்தார். கோப்பு வகையிலான இது, சிவப்பு நிறத் துணியால் சுற்றப்பட்டு, அதன் மீது தங்க நிறத்தில் தேசியச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.